ரொம்ப பெருமையா இருக்கு.. தோல்விக்கு பின் பென் ஸ்டோக்ஸ் பேட்டி.. காரணம் என்ன.?..

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்கள் குவித்தும் ஆல் அவுட் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய ஸ்பின்னர்களின் சுழற்பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்து வீசி அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 192 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த முறை தொடக்கம் சிறப்பானதாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 2 ரன்களுக்கு ஆட்டம் இழந்த கேப்டன் ரோஹித் சர்மா இந்த முறை சுதாரித்துக் கொண்டு மிகவும் நிதானமாக விளையாடினார். அதே நேரத்தில் அதிரடியையும் கைவிடவில்லை.

ஆண்டர்சன் வீசிய ஓவரில் அவர் அடித்த சிக்சருக்கு மைதானமே அதிர்ந்தது. சிறப்பாக விளையாடி வந்த அவர் அரை சதம் அடித்த நிலையில், 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் விளையாட வந்த கில் ஒரு முனையில் நிலைத்து நின்றாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. ஜெய்ஸ்வால் 37 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பட்டிதார் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேற, ஜடேஜா 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஜூரேல் இந்த முறையும் நிலைத்து நின்று 39 ரன்கள் குவிக்க, கில் மறுமுனையில் 52 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன் மூலம் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் தோல்விக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ்

“இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டி. ஆனால் எங்கள் அணியின் ஸ்கோர் போர்டு இந்த ஆட்டத்திற்குப் போதிய மதிப்பை கொடுக்கவில்லை. இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாகப் பந்து வீசினர். ஆனால் அது குறித்து என்னால் முழுமையாகப் பெருமைப்பட முடியவில்லை. இந்திய அணியிலும் தற்போது நல்ல திறமைகள் வெளிவந்துள்ளது.

ஜடேஜா, அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு எதிராக இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்தது மிகவும் கடினமாக இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஜோ ரூட்டின் ஆட்டம் மிகவும் அபாரமானதாக இருந்தது. முன்னர் அவரைப் பற்றி வந்த விமர்சனங்கள் நியாயமானதாக இல்லாமல் வக்கிரம் நிறைந்ததாக இருந்தது. சுழற் பந்து வீச்சாளர் பஷீர் அருமையாக பந்து வீசினார். அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து அடுத்த போட்டியில் சிறப்பாக முன்னேறுவோம்” என்று கூறினார்.

Read Previous

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 10 பைசா சரிவு: ஒன்றுக்கு ரூ.5.10 ஆக நிர்ணயம்..!!

Read Next

இந்திய கடற்படையில் அதிகாரி பணி..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular