
தேனி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம். இவர் இதே மருத்துவமனையில் ஆண்டுதோறும் புதுப்பிக்கும் வகையில் கடந்த 12 வருடங்களாக கேண்டீன் நடத்தி வந்த மாரிசாமி என்பவரிடம் ரூ 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
கேண்டின் ஒப்பந்தத்தின்படி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டிலுக்கு மூன்று குடிநீர் இணைப்புகள் வழங்காமல் துண்டித்ததால் தொழில் செய்ய இயலாத வேதனையில் இருந்த மாரிசாமி தேனி மாவட்ட மருத்துவ கல்லூரியின் முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு இரண்டு தவணையாக ரூ 16 லட்சம் கொடுத்துள்ளார்.
தேனி அரசு மருத்துவமனையின் முதல்வர் அறையில் வைத்து மீனாட்சி சுந்தரத்திற்கு ரூ 10 லட்சம் ரூபாயும் ,மீனாட்சிசுந்தரத்தின் வீட்டில் வைத்து ரூ 6 லட்சம் ரூபாய் என்று மொத்தம் ரூ 16 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து தொடர்பான வீடியோ மாரிசாமி வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அரசு அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் பெற்றதற்கான முகாந்திரம் இருந்ததால் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மீனாட்சிசுந்தரம் மீது துணை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.