
வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC) ஆனது , ஒரு வங்கி தோல்வியடைந்தால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையை ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை காப்பீடு செய்து வைத்திருக்கும். இந்த DICGC யின் காப்பீட்டின் கீழ், ஒரு வங்கியில் ஒரு வைப்புத்தொகையாளருக்கு ரூ.5 லட்சம் வரை பணத்தைத் திரும்பப் வழங்க உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் வங்கி வைப்புத்தொகைக்கான காப்பீட்டு மதிப்பை உயர்த்துவது தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, வங்கி வைப்புத்தொகை காப்பீட்டுக்கான வரம்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதிச் சேவைகள் செயலாளர் எம். நாகராஜ் கூறினார் . இதை தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியில் வங்கி வைப்புத்தொகைகளுக்கான காப்பீட்டு மதிப்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக மத்திய அரசு உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைப்பு காப்பீடு என்பது கடனை திருப்பிச் செலுத்த இயலாத வாடிக்கையாளரை பாதுகாக்க உதவும் ஒரு காப்பீடு திட்டமாகும். மேலும், வெளிநாட்டு, மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் வைப்புத்தொகைகள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான வைப்புத்தொகைகளைத் தவிர மற்ற அனைத்து வகையான வைப்புத்தொகைகளுக்கும் காப்பீடு உண்டு. இந்த காப்பீடு விதியானது ஒவ்வொரு வங்கிகளுக்கு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.