வருமான வரித்துறையினர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அமயபுரம் மற்றும் வீரப்பூரில் ஆங்கில மருந்து கடை நடத்தி வருபவர் சுதாகர் (வயது 44). கடந்த1 ஆம் தேதி சுதாகர் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் மருந்துக் கடையில் இருந்துள்ளனர்.
அப்போது மருந்து கடைக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி கடையில் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் அவரை கடத்திச் சென்று குடும்பத்தாரிடம் ரூ. 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவ்வளவு பணம் தர முடியாது என கூறியதால் பேரம் பேசி தொகையை சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டே வந்து இறுதியாக ரூ.10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.
வருமான வரித்துறை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என மாற்றி, மாற்றி கூறியதால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் திருச்சி எஸ்.பி யின் புகார் எண்ணுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், போலீசார் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த நௌவ்ஷாத் (வயது 45), திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தைச் சேர்ந்த சேகர் (வயது 42), சுதாகர் ( 44), மதுரை, கோசா குளத்தைச் சேர்ந்த மாரிமுத்து (53), சென்னை ஆவடியைச் சேர்ந்த வினோத்கங்காதரன் ( 37), மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) ஆகிய ஆறுபேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ. 5.18 லட்சம், 5 சவரன் நகை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற உப்பிலியபுரத்தைச் சேர்ந்த சுதாகர், வலது கால் உடைந்த நிலையில் மணப்பாறை அரசு மருத்துவ மனையில் போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.