காளான் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருள் ஆகும். இந்த காளான் சுவை நிறைந்தது மட்டுமின்றி சத்துக்கள் நிறைந்த உணவும் கூட. காளானில் புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் டி போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் காளானில் அதிகம் உள்ளது. காளானை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் வயிற்றுப்புண், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளில் இருந்து விடுபட முடியும். மேலும் காளான் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை காளான் சரி செய்யும் இயல்புடையது. இத்தனை நன்மைகள் நிறைந்த காளானை வைத்து எப்படி சுவையான காளான் குழம்பு செய்யலாம் என்பதை பார்ப்போம்.
காளான் குழம்பு செய்வதற்கு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, ஒரு பட்டை, ஒரு பிரியாணி இலை, மூன்று கிராம்பு, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்தும் வதக்க வேண்டும்.
இவற்றை நன்கு வதக்கிய பிறகு ஒரு தக்காளியை சேர்த்து அது மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ளவும். தக்காளி மென்மையாக வதங்கிய பிறகு கால் கிலோ அளவு காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு இதனை கொதிக்க விடவும்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவு துருவிய தேங்காய் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்த இந்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம் அவ்வளவுதான் சுவையான அட்டகாசமான காளான் குழம்பு தயாராகி விட்டது…!