
Oplus_131072
♥நம் சமூகத்தில், ஒரு கணிசமான சதவீதப் பெண்கள் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். உண்மையில், இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருக்கிறார்களா? என்றால், அதுதான் இல்லை.
♥இவர்கள் தங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் முன் விழித்தெழுந்து, எல்லோருக்கும் பின் உறங்கச் செல்கிறார்கள். இந்த விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட காலம் முழுவதும் இவர்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். ஓய்வெடுக்கும் நேரத்திலும்கூட இவர்களின் கைகள் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.
♥ஒரு குறிப்பிட்ட வேலை என்றில்லாமல், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருப்பார்கள். அவளது வீட்டுப் பணிகளைத் துப்புரவுப் பணி, சமையல் பணி, சலவைப் பணி, குழந்தைகளையும் முதியவர்களையும் வளர்ப்புப் பிராணிகளையும் பராமரிக்கும் பணி என பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பிரிவும் ஏராளமான சின்னஞ்சிறு பணிகளை உள்ளடக்கியவையாக இருக்கும்.
♥வீட்டுத் துப்புரவுப் பணிகள்: வாசல் பெருக்கி கோலம் போடுவது, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது, கழிவறையைச் சுத்தம் செய்வது, வளர்ப்புப் பிராணிகள் (ஆடு, மாடு, கோழி, நாய், பூனை) இருந்தால் அதன் வசிப்பிடத்தை சுத்தம் செய்வது.
♥சமையல் பணிகள்: மார்க்கெட் சென்று காய், கனிகளையும் மாமிசத்தையும் வாங்கி வருவது, மளிகைக் கடைக்குச் சென்று மளிகைப் பொருட்களை வாங்கி வருவது, ரேஷன் கடைக்குச் சென்று ரேஷன் பொருட்களையும் மண்ணெண்ணெயும் வாங்கி வருவது, மாவு மில்களுக்குச் சென்று மாவுகளை அரைத்து வருவது, தண்ணீர் பிடித்தல், பாத்திரங்களைக் கழுவுதல், தேநீர் போட்டுக் கொடுத்தல், மாவுகளைக் கொண்டு தோசையோ, இட்லியோ, சப்பாத்தியோ, பூரியோ செய்தல், அதற்கேற்ற சட்னி, சாம்பார், குருமா வகையறாக்களைச் செய்தல், அரிசியைக் கழுவி சோறு சமைத்தல், காய்களைத் துண்டுகளாக்கி சாம்பாரோ குழம்போ செய்தல், ரசம் வைத்தல், கூட்டுப் பொறியல்… பிறகு, சமைத்த உணவை குடும்பத்தினருக்குப் பரிமாறுதல், எல்லோரும் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுதல், பின்னர், எல்லோரும் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து அடுக்கி வைத்தல். இந்த சமையல் வேலைகளை தினந்தோறும் மூன்று முறைகளோ அல்லது இரண்டு முறைகளோ குடும்பச் சூழலுக்கு ஏற்ப செய்தாகவேண்டும்.
♥ அவ்வப்போது டீ, பழச்சாறு பானங்களும் தயாரிப்பது உண்டு.
துணிகள் சார்ந்த பணி: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்த துணிகளை அப்படி அப்படியே அவிழ்த்துப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அவற்றை மட்டுமல்லாமல், அழுக்குத் துணிகளையும் பாய், படுக்கை விரிப்பு, போர்வை போன்ற மற்ற துணிகளையும் துவைத்து, காயவைத்து, காய்ந்த பின் மடித்து அதற்குரிய இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.
♥அயனிங் செய்வதும் உண்டு.
குழந்தைகளையும் முதியவர்களையும் வளர்ப்புப் பிராணிகளையும் பராமரித்தல்: வீட்டில் சிறு குழந்தைகளோ, வயது முதிர்வின் காரணமாக படுத்த படுக்கையாக பெரியவர்கள் இருந்தாலோ அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். குழந்தைகளைக் குளிக்க வைத்து, உணவு ஊட்டி, சீருடை அணிவித்து பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் அழைத்து வரவேண்டும்.
♥குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க நேர்ந்தால் இடையில் ஒரு முறை மதிய உணவளிக்க பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கும். வளர்ப்புப் பிராணிகளுக்கு நோய் வராமல் ஆரோக்கியப் பணிகள் செய்தல், குளிப்பாட்டுதல், நீரும் உணவும் வழங்குதல்…
♥இதரர் பணிகள்: இவை மட்டுமல்லாது, அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்லும் குடும்பத்தினரின் விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் அவர்களின் மனம் நோகாமல் பணிவிடை செய்யவேண்டும்.
இப்படியாக, ஒரு குடும்பப் பெண்ணின் தினசரிப் பணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். மிக முக்கியமாக, இந்தப் பணிகளை எல்லாம் மாண்புடனும் ஈடுபாட்டுடனும் செய்யவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் எரிச்சலடையவோ கோபப்படவோ கூடாது. “சரியாக செய்யவில்லை’’ என்று யாராவது தட்டை வீசி எறிந்தாலோ, கோபமாகத் திட்டினாலோ சகித்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் ஒரு குடும்பப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய குணநலன்கள்.
♥இத்தனைப் பணிகளையும் செய்யும் பெண்கள்தான் “சும்மா வீட்டிலே இருக்கிறேன்’’ என்று தாழ்வு மனப்பான்மையுடனும் தயக்கத்துடனும் சொல்கிறார்கள். காரணம், இவர்கள் செய்யும் எந்த ஒரு பணிக்கும் ஊதியம் கிடையாது. ஆகவே, இவர்கள் செய்யும் பணிகளை “ஊதியம் இல்லாத கவனிப்பு பணிகள்’’ (Umpaid care works) என்று உலக அளவிலான அமைப்புகள் வரையறுத்துள்ளன.
♥இவர்கள் செய்யும் பணிகளுக்கு ஊதியம் இல்லை என்பது மட்டுமல்ல, வீட்டில் மரியாதையும் கிடையாது. மாறாக, ‘வருமானம் ஈட்ட வக்கற்று, வீட்டிலேயே வெட்டியாக பொழுதைக் கழித்துக்கொண்டு ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருப்பதாக’ இந்த ஆணாதிக்க சமூகம், தங்களுக்குச் சாதகமாக இவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அதனால்தான், “என் மனைவி வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்’’ என்று எவ்வித மனஉறுத்தலும் இல்லாமல் கணவனும், அவரைப் பின்பற்றி குழந்தைகளும் “அம்மா, சும்மாதான் வீட்டில் இருக்கிறார்’’ என்றும் சொல்வதால், இவளும் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்” என்று சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்..