அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்தில் உள்ள பர்வை ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த கட்டிடம் ஆனது அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தில் தற்பொழுது நடந்து வரும் பல்வேறு செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அப்பொழுது அவர் “திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது ஆனால் இதுவரை எந்த ஒரு வளர்ச்சி பணியும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. நாங்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நிலுவையில் உள்ள 10 திட்டங்கள் குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளோம். ஆனால் இதுவரை அதில் ஒன்றரை கூட திமுக அரசு நிறைவேற்ற வில்லை.
மேலும் மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த ஒரு பயனும் இல்லாமல் உள்ளது. மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அம்ருத் குடிநீர் திட்டம் இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது”, என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலை லண்டன் செல்வது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள செல்லூர் ராஜு “அரசியல் படிக்க லண்டன் செல்லும் அண்ணாமலை அங்கு நன்றாக படிக்கட்டும். லண்டனில் அவர் நல்ல பண்புகளை கற்றுக் கொண்டு வரட்டும். மறைந்த தலைவர்களை இழிவாக பேசக்கூடாது என்பதை அவர் வெளிநாட்டில் கற்று வரட்டும் ”,என்று அவர் கூறியுள்ளார்.