
கரூர் மாவட்டம் குளித்தலை மேல் நங்கவரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் இளங்கோவன் (28). இவர் கடந்த 16 ஆம் தேதி தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனாருடன் வீட்டிற்கு வேலி அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் குடியிருக்கும் அறிவழகன், கரிகாலன், செல்லாயி ஆகிய மூன்று பேரும் இது எங்கள் இடம் என்று கூறி வேலி அமைக்க கூடாது என தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். மேலும் அருகில் இருந்த சவுக்கு குச்சியை எடுத்து மூன்று பேரையும் தாக்கி உள்ளனர். வலி தாங்க முடியாமல் மூன்று பேரும் சத்தம் போடவே அங்கிருந்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இளங்கோவன், அய்யனார், அனிதா ஆகிய மூன்று பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் அறிவழகன், கரிகாலன், செல்லாயி ஆகிய மூன்று பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.