
- 16 வயது சிறுமியின் கர்ப்பத்தை மறைக்க பெற்றோர் செய்த செயல்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!
திருப்பூர் மாவட்டம் நல்லூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அருகில் உள்ள மருந்து கடையில் எந்த ஒரு மருத்துவரின் பரிந்துரையும் இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த மாத்திரையை சாப்பிட்ட சிறுமிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து, கடுமையான வயிற்று வலியால் சிறுமி துடித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த 27ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முத்தனம்பாளையம் சாலையில் உள்ள மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து விசாரணை செய்ததில் முறைகேடாக மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டதை தொடர்ந்து மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் 16 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது எவ்வாறு ? இதற்கு காரணமான நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.