தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் ஷாலினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறுகையில் “தங்கம் விலை கடந்த 2013இல் கிராம் ரூ. 1500-ல் இருந்தது சவரன் ரூ.12,000 என இருந்தது. 2024 இன்று தங்கத்தின் விலை 10 மடங்கு உயர்ந்து சவரன் ரூ.52,000 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு லட்சம் என்ற அளவில் சென்றுவிடும். 2030 ஆம் ஆண்டிற்கு முன்பும் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை கடந்து செல்லலாம். உலகப் போர்கள் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்கின்றது.
கோவிட் போன்ற பெரும் தொற்று ஏற்பட்டாலும் அதே நிலைதான். அட்சய திருதியை காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் தங்கம் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நுகர்வோரின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருப்பதால் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. அவர்களுக்கு தங்கத்தின் மீதான முதலீடு நீண்ட காலம் முதலீடுக்கு உகந்தது என்று கருதுவதால் நகையின் விலை உயர்கிறது. பொருளாதார வீழ்ச்சி இருக்கும்போது கட்டாயம் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு செல்லும். அதன் விலை குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை”, எனக் கூறி உள்ளார்.
குண்டுமணி தங்கமாவது வாங்கி திருமணத்தை நடத்தி விட வேண்டும் என எண்ணிப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்துக்கு இந்த செய்தி பேர்அதிர்ச்சி மட்டுமே வழங்கும் வகையில் அமைந்துள்ளது.