சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இதன்பின் நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி பலமுறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டதால், இதுவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்னதாக செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக காணொளியில் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.
இதை அடுத்து படுக்கையில் படுத்திருந்தவாறு ஆஜர் படுத்தப்பட்டதால் என்ன ஆனது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக சிறை காவலர் விளக்கம் அளித்தார். இதன் காரணமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவரின் நீதிமன்ற காவல் 52வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.