அம்மாவும்.. அம்மிக்கல்லும்.. பழைய நினைவுகளை நினைவூட்டும் அம்மி கல்லை பற்றிய பதிவு..!!

அம்மா என்றாலோ அம்மா வீடு என்றாலோ எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது அம்மா வைத்திருந்த அம்மிக்குழவி தான்.

அவளுக்கு அதன் மீது என்ன தான் பாசமோ தெரியாது, அடுப்படியில் இருக்கும் அம்மியை தினமும் தண்ணீர் தெளித்து கழுகிவிட்டுக்கொண்டே இருப்பாள்.

பாத்திரம் விலக்கும் தொட்டிக்கு அருகிலேயே வைத்திருந்ததால் காலை,பகல்,மதியம்,இரவு என ஒரு வேளை தவறாமல் அதில் உள்ளங்கையை வைத்து வழித்து வழித்து அதன் மீது பட்டுத்தெறிக்கும் தண்ணீர்த்துளிகளை துடைத்துவிட்டுக்கொண்டே இருப்பாள்.

எல்லாமும் பொடிகளாய் அரைத்துக்கொள்ள வசதிகள் மிகுந்துவிட்ட 2020 வரையிலும் கூட தினமும் எதையோ ஒன்றை வைத்து அம்மியில் நகர்த்தும் வேலையை செய்வாள். ஒண்ணுமே கிடைக்கலான்னா கல்லு உப்பை வைத்து சர்ர்ர்ர்ரக்…சர்ர்ர்ர்ரக்… என நகர்த்தாமல் அவளால் இருக்கமுடிந்தததில்லை.

1983இல் சென்னைக்கு வந்து முதன்முதலாக அத்தா மகாபலிபுரம் கூட்டிப்போனபோது அங்கே வாங்கிட்டு வந்தேன், நான் வாங்குன முதல் வீட்டு உபயோகப்பொருள் என்பாள். கருங்கல்லில் அவள் முழங்கை அளவுக்கான ஒரு அம்மியும் குழவியும், அதை அவள் தொட்டிலில் போட்டு ஆட்டவில்லை என்பது மட்டுமே ஒரு குறை. அத்தா மீதான காதலை விட அவளுக்கு அம்மி மீது தான் அத்தனை அடங்காத காதல்.

வீட்டுக்கு வரும் யாரும் அவளது அம்மிக்குழவியை பார்த்து ஆச்சரியப்பட்டுவிட்டால் அவளுக்கு ஆனந்தமோ ஆனந்தம். அப்படி எனது 12ஆம் வகுப்பாசிரியர் பானுமதி வந்து என் வீட்டைப்பார்த்தவர் வேறு எதையும் கவனிக்காமல் நேராக அடுப்படிக்கு வந்து அம்மிக்கல்லை பார்த்து, “இத்தற குட்டியா ஒரு அம்மியா” என மலையாளங்கலந்த தமிழில் பரைந்தது அவளுக்கு ஆஸ்கர் கொடுத்தது போல இருந்தது.

ரசத்துக்கோ, கறிக்கோ,நல்லி எலும்பு சாறுகளுக்கோ அல்லது சம்மந்திக்கும் தேங்காய் செருக்குவதற்குமோ கூட அவள் ஆயுளில் மிக்ஸியை பயன்படுத்தியதில்லை. ஒருமுறை நகர்த்தினாலே இடுப்பு வலி வந்துவிடும் எனக்கு, சலிக்காமல் சமையலின் ருசிக்காய் தினமும் நகர்த்த ஓயவில்லை அவளும்.

ஊர் வீட்டில் அவளுக்கு அவள் அம்மா கொடுத்த சீதனமாக ரோஸ் நிறத்துக்கல்லில் ஒரு அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் கூட பாடம் செய்த மேனியாய் அழகாய் அமர்ந்திருக்கும். ஆனால் அது ராட்சத அளவில் இருக்கும், அவளால் மட்டுமே அதனை நகர்த்தி வைக்க முடியும்.

அவள் மரணித்த நேரத்தில் இருந்து அம்மிக்குழவி அழுதுகொண்டிருக்கும். (இது குறித்து கதை கூட எழுதி வைத்திருக்கிறேன், பதிவிடத்தான் நாள் வரவில்லை)

தேவைதைகள் வாழும் வீட்டில் குளியல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்குமாம், அம்மா வாழ்ந்த வீட்டில் அம்மி உருளும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. காலையில் எழுந்திட அலாரம் தேவையில்லை அவள் அம்மி இழுத்தாலே போதும், வீடு சோம்பல் முறித்துவிடும். அம்மா வீடு காலி பண்ணி வரும் வரை அந்த அம்மி உருட்டிய சத்தம் என் அடிவயிற்றுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.

Read Previous

சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் ஏற்ற டேஸ்டியான முட்டை கிரேவி..!!

Read Next

சைவத்தில் இருந்து அசைவம் வரைக்கும் பயன்படுத்தப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular