உடலுக்கு பல நன்மைகளை தரும் தட்டப்பயிறில், சுவையான கத்தரிக்காய் புளிக்குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதம், பழைய கஞ்சி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு ஏதுவான தட்டைப்பயிறு கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை:
தட்டை பயிறு – 1/2 கப்,
கத்தரிக்காய் – 4,
தக்காளி – 2,
நாட்டு வெங்காயம் – 70 – 100 கிராம் அல்லது பெரிய வெங்காயம் – 2 அல்லது 3,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – 1/4 கரண்டி,
புளிக்கரைசல் – சிறிதளவு,
குழம்பு மிளகாய் தூள் – 2 கரண்டி,
தாளிக்க:
எண்ணெய் – 2 கரண்டி,
சோம்பு – 1/2 கரண்டி,
சீரகம் – 1/4 கரண்டி,
கறிவேப்பில்லை – சிறிதளவு,
பூண்டு – 6,
செய்முறை:
முதலில் தட்டைப்பயிறை வானெலியில் வதக்க வேண்டும். பின் உலர வைத்து முக்கால் பதம் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒரு 4 மணிநேரம் முன்பே பயிறை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் வதங்கியதும் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சிறிதாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
இவை நன்கு வதங்கியப்பின் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, புளிக்கரைசலை அதில் ஊற்றி லேசாக கொதிக்க விடவும். இவை கொதிக்கத் தொடங்கியப்பின், எடுத்துக்கொண்ட தட்டைப்பயிறை சேர்த்து, விருப்பம் இருப்பின் தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
தட்டைப்பயிறு குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருந்தால் சுவையாக இருக்கும். இறுதியில் சிறிதளவு கறிவேப்பில்லை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிவும். அவ்வளவுதான், சுவையான தட்டைப்பயிறு கத்தரிக்காய் குழம்பு தயார்.




