பெருமாள் கோவிலில் பல வேளைகளில் தீர்த்தம் கொடுத்து, தலையில் சடாரி வைக்கிறார்கள்..!! அதற்கான காரணம் என்ன தெரியுமா..??

Oplus_131072

பெருமாள் கோவிலில் பல வேளைகளில் தீர்த்தம் கொடுத்து, தலையில் சடாரி வைக்கிறார்கள்!

சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்!
இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற!
கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்!
சுவாமி சிவானந்தரிடம் அப்துல் கலாம் ஒரு கேள்வி் கேட்டாராம்; அக்கினிச் சிறகுகள் நூலில் வரும்! – How can I find my right teacher?
அதற்குச் சிவானந்தர் சொன்ன பதில் – When the student is ready, the Teacher arrives!

அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது!

அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி!
நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்!
அவரே இறைவனின் சடாரியாக இருந்து,
அவன் பாதங்களை,
நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து,
நம்மை உய்விக்கிறார்! – இதுவே சடாரியின் தத்துவம்!
சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு? ஸ்ட்ரெயிட்டா பாதங்களையே தலை மேல் வைத்து விடலாமே?
“தலை” மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், “தலை” கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு “தலையே” பிரதானம்!
என்னா “தல”, செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்! “தலை”யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன!

இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!
ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! – அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? – இறைவனின் திருப்பாதங்கள் தான்! – எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்!

அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!
அதனால் தான் சடாரியில் கிரீடம் வைத்து, அதன் மேல் சுவாமியின் திருவடிகளை வைத்தார்கள்!
எந்தப் பேதமும் இன்றி அனைவருக்கும் தலையில் சூட்டி அழகு பார்க்கும் கிரீடம் அது! யாருக்கும் மறுக்கப்படாத கிரீடம் – அதுவே சடாரி!!

நாராயணன் என்ற பதத்தில், நாரம் என்பதற்குத் தண்ணீர்-னு பொருள்!

நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்!

அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்துள்ளது!
அவன் பேரும் நீர்! அவன் வண்ணமும் நீர்!
அவன் உறைவதும் பாற்கடல் நீர்! அவனுடன் அலைமகளும் நீர்!
“ஆபோ நாரா” என்று ஒரு சூக்தமும் உண்டு! பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு!

துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், – துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்ற குறள் நினைவிருக்கா?
உணவை உற்பத்தி செய்யவும் நீர் தேவை! அதே சமயம், அந்த நீரே ஒரு உணவாகவும் இருக்கு!

நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான்! அதே சமயம் காரியமாகவும் இருக்கிறான்!
அதனால் தான் “ஆழிமழைக் கண்ணா” என்று மழை நீரோடு, நாரணனைச் சேர்த்தார்கள்!

நீருக்கு ஒரு பெரிய குணம் இருக்கு! – அதுக்கு வடிவம் என்பதே கிடையாது! ஆனா, எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
அதே போல் தான் நீர்வண்ணனாகிய நாரணனும்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! அடங்காது எங்கும் பரந்த பரந்தாமன், எதிலும் அடங்கி விடுவான், நீரைப் போலவே!

மீனா, ஆமையா, பன்றியா, நரசிங்கமா, குள்ளமா, உசரமா, முனிவனா, குடும்பஸ்தனா, அரசனா, மாட்டுக்காரனா, கற்சிலையா, அடியவர் மனதா – எதிலும் அடங்கி விடும் தன்மை அவனுக்கு! எளியவர்க்கு எளியனான இந்த குணத்துக்குக் கூட “நீர்மை” என்றே பெயர்!

அதனால் தான் நாரணன்-நீரான் என்பதைக் காட்டி, அவனையே நமக்கு மணக்க மணக்கப் பருகத் தருகிறார்கள்! அதுவே தீர்த்தம்! ஒரே ஒரு சொட்டு போதும்! உள்ளில் அடங்க!
அதுவும் அவன் திருமேனியில் பட்ட நீர் என்பதால், அவன் திருமேனி சம்பந்தத்தையும் நமக்கு அளிக்கிறது!

தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்!

Read Previous

முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடிகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவு..!!

Read Next

கர்மாவின் ரகசியம்: நல்லவர்களுக்கு ஏன் துன்பம்..?? கெட்டவர்களுக்கு ஏன் இன்பம்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular