பொதுவாக பெரும்பாலான வீடுகளில் காலையுணவாக இட்லி சாப்பிடுவார்கள்.
இதன்போது ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் சாப்பிட்டு சலித்து போயிருக்கும். இப்படியான நேரங்களில் வெள்ளரிக்காயை வைத்து சுவையான சட்னி செய்து சாப்பிடலாம்.
வெள்ளரிக்காயை வைத்து சாலட் செய்து சாப்பிட்டிருப்போம். புதிதாக சட்னி செய்யலாம் என ஒரு ரெசிபி வெளியாகியிருக்கின்றது.
அந்த வகையில், வெள்ளரிக்காய் சட்னி செய்வது எப்படி என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளரிக்காய் – 1
* கடலை எண்ணெய் – 2 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* பூண்டு – 5-6 பல்
* வரமிளகாய் – 4-5
* புளி – 1 நெல்லிக்காய் அளவு
* தேங்காய் – 1/4 கப் (துருவியது)
* கொத்தமல்லி – 1 கையளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கான பொருட்கள்:
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வெள்ளரிக்காய் சட்னி:
சட்னிக்கு தேவையான வெள்ளரிக்காயை தோல் நீக்கி தனி துண்டங்களாக்கி வைத்து கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும்.
பின்னர் அதில் பூண்டு, வரமிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதங்கிய பின்னர் துண்டங்களாக்கப்பட்ட வெள்ளரிக்காயை 4 நிமிடங்கள் எண்ணெயில் போட்டு வதக்கி இறக்கவும்.
வதங்கிய பின்னர் தேங்காய், கொத்தமல்லி, உப்பு, 3/4 கப் அளவு நீர் ஆகியவற்றுடன் வதங்கிய வெள்ளரிக்காயையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
கடைசியாக அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் சட்னி தயார்!