Oplus_131072
புண்ணியத்தில் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில்
ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு கொடுக்கும் நம்பிக்கையை பெரிய புண்ணியமாக சொல்வேன்.
சமீபத்தில் ஒரு திருநெல்வேலிக்காரர் வயது 65 க்கு மேலே இருக்கும் ஒரு வாழ்க்கை கதை சொன்னார்.
அவர் சென்னையில் சிறுவயதிலேயே வந்து கடை கடையாக கடை பையனாக நின்று இப்போது தொழிலில் ஒரளவுக்கு வசதியாய் இருப்பவர்.
அவருக்கு முப்பத்தியைந்து வயது பக்கத்தில் இருக்கும் போது அவர் சித்தி மகளாகிய தங்கைக்கு திருமணம் என்று கார்டு கொடுத்திருக்கிறார்கள்.
பெண் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு ஊரில் உள்ளவர். அப்பாவி. அவருக்கு உலகமே தெரியாது. 23 வயது தங்கை.
பையனுக்கு திருவிழா போன்றவற்றில் பொம்மை கடை மாதிரி சிறிய கடை போடுவது மற்றும் பஞ்சு மிட்டாய் விற்கும் தொழில். அதில் ஒன்றுமே பெரிய வருமானம் எதுவும் கிடைக்காது.
ஆனாலும் பையனுக்கு சென்னையில் மளிகைக்கடை இருக்கிறது என்று ஒரு பூட்டிய கடையையும் வீட்டையும் காட்டி ஏமாற்றி திருமணத்துக்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்கள்.
பெண் வீட்டில் ஏழ்மை நிலையில் இருந்ததால் இதையெல்லாம் விசாரிக்காமல் இவருடைய சித்தி மகளாகிய தங்கைகை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.
பெரியம்மா பையனாகிய இவரிடம் கூட தகவல் சொல்லாமல் கல்யாணம் நிச்சயம் செய்து கார்டு கொடுத்து விட்டார்கள்.
இவருக்கு திருமணத்துக்கு சென்று வாழ்த்தி வந்திருகிறார்.
சென்னையில் எங்கே என்று கேட்டதற்கு சென்னையில் இங்கே என்று சொல்லி இருக்கிறார்கள். பிறகு சென்னை வந்து ஒரு மாதம் ஆன பிறகு ”சரி நம்ம தங்கச்சி எப்படி இருக்கிறாள்” என்று பார்த்து விட்டு வருவோமே என்று தன் குடும்பத்தோடு அவர்கள் சொன்ன இடத்துக்கு போயிருக்கிறார்.
அங்கே தங்கை இல்லை. ஆனாலும் விடாமல் விசாரித்து விசாரித்து போயிருக்கிறார். முடிவில் வீட்டைக் கண்டுபிடித்து விட்டார். “ ஏ என்ன இங்கன இருக்க. அட்ரஸ் சரியா இல்லையே” என்று சொல்லவும் தங்கை ஒவென்று அழுதுவிட்டார்.
“இவங்க பலசரக்கு கடையெல்லாம் வைக்கலண்ணே. திருவிழாவுல சின்ன சின்ன பொம்மை விக்கிற வேலைண்ணே. இந்த ரூம் தான் என் வீடு. இங்கதான் சமையலு எல்லாம் செய்யனும்” என்று தேம்பி அழுது இருக்கிறார் தங்கை.
அந்த வீட்டின் எளிமையின் உச்சமாக, வறுமையின் உச்சமாக, கதவு கூட கிடையாதாம். பெரிய தடித்த பெட்ஷீட்தான் கதவாம். இதுதான் இவரை அதிகம் உறுத்தி இருக்கிறது.
“சரி என் வீட்டுக்கு விருந்துக்கு வாங்க”. என்று தங்கையையும் மாப்பிள்ளையும் அழைத்து வந்தவர் ஒருவாரம் இருவரையும் விடவில்லையாம்.
உபசரணைகள் எல்லாம் நடந்திருக்கிறது.
ஒருவாரம் முடிவில் தங்கையையும் மாப்பிள்ளையும் சென்னையில் கொஞ்சம் புறநகரில் உள்ள இடம் ஒன்றுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
தங்கையிடம் கேட்டிருக்கிறார்.
“நீ அண்ணன நம்புறியா”
“ஆமா”
“எப்பவும் நம்புவியா”
“ஆமாண்ணே நம்புறேன்”
“என்ன சொன்னாலும் செய்வியா”
“செய்வேண்ணே”
இங்க பாரு என்றொரு இடத்தை காட்டி இருக்கிறார். அது ஒரு சிறிய கடை. கடையை ஒட்டி சிறியதொரு அறை. சிறிய கடை என்றால் இரண்டு கையையும் விரித்துக் கொண்டு ஒருவர் அதற்குள் நுழைய முடியாது.
“இந்தா இந்த கடை உனக்குதான். ஆறு மாசத்துக்கு வாடகை எதுவும் கொடுக்க வேண்டாம். நா பேசிட்டேன்.இதுதான் உங்களுக்கு வீடும்”
“…………”
“சரக்கு எப்படி போடுவ கடைக்குள்ள வியாபாரத்துக்கு”
“…………”
“நான் கொஞ்சம் கொடுக்கிறேன். நகை எவ்வளவு வைச்சிருக்க”
மிகக் குறைவாக சொல்லி இருக்கிறார்.
“எல்லாத்தையும் கொடுத்திரு” என்று நகையை விற்று அவரும் பணம் போட்டு சிறிய கடையில் சரக்கை ஏற்றிவிட்டார்.
“மாப்பிள்ளை அவர் செய்ற வேலையை செய்யட்டும். நீ என்ன பண்ற கடைக்குள்ளதான் இருக்கனும். உனக்கு வேற எந்த வேலையும் கிடையாது. நிக்கனும் வியாபாரம் செய்யனும் புரியுதா”
“புரியுதுன்ணே”
அந்த 24 வயது பெண் சிறிய கதவை திறந்து கொண்டு அன்று அந்த கடைக்குள் நுழைந்தவர்தான்.
அடுத்த 25 வருடங்கள் அக்கடையை விட்டு நகரவே இல்லை.
உழைப்பும் உழைப்பு நிமித்தமாகவே இருந்திருக்கிறார்.
மூன்று குழந்தைகள் பிறந்து மூன்றுமே படித்து
நல் பட்டங்கள் பெற்றன.
அக்கடையை வாங்கிவிட்டார்.
அங்கேயே நிலம் வாங்கி மிக வசதியான வீடும் காரும் வாங்கி இப்போது சிறப்பாகவே இருக்கிறார்.
இச்சம்பவத்தை கேட்கும் போது அசந்துவிட்டேன்.
எப்பேர்ப்பட்ட நம்பிக்கையை தங்கைக்கு கொடுத்திருக்கிறார்.
-வரன் பார்க்கும் போது இவரை மதிக்கவில்லை.
– அண்ணனை வீட்டுக்கு தங்கை அழைக்கவில்லை.
– சரியான அட்ரஸ் கொடுக்கவில்லை.
– இவரே போய் அட்ரஸ் கண்டுபிடித்து
– தங்கையின் கதவில்லா வீடு பார்த்து மாப்பிள்ளையை திட்டாமல்
– சாமர்த்தியமாக விருந்துக்கு அழைத்து ஒருவாரம் தங்க வைத்து.
– அந்த நேரத்துக்குள் ஒரு சிறிய வீடும் க்டையும் சேர்ந்திருக்கும் இடம் பார்த்து
– தங்கைக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்து, தங்கையின் நகைகளை தைரியமாக விற்க உதவி செய்து ( லேசில் தங்க நகைகளை விற்க முன்வரமாட்டர்கள்)
– மாப்பிள்ளையை அதே வேலை பார்க்க சொல்லி தங்கையை கடைக்குள் “இதுதான் உன் ஒரே வாய்ப்பு” என்று அன்பாக எச்சரித்து அனுப்புகிறார்.
விளைவு நல்லதாகவே நடந்திருக்கிறது.
ஒருவர் வாழ இன்னொருவர் நம்பிக்கை கொடுக்கும் கதைகளை எத்தனை கேட்டாலும் சலிக்காதுதான்.




