பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை நிறுத்தப் போவதாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.61 வரை செலவாகும் நிலையில், ஆவின் நிறுவனம் ரூ.38 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்குவதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.42 முதல் ரூ.50 வரை வழங்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து நிதி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிர்வாகம் உடனடியாக கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் ஆக.24 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளனர்.




