சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: 3 பேர் படுகாயம்!

 

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த சீர்காழியைச் சேர்ந்த மீனவர், கடலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 3 தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் காந்தி தெரு சுனாமி நகரைச் சேர்ந்த மாவீரன், கீழ மூவர் கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசல் மீனவர் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டம் சொத்திக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தனர்.

இந்த நிலையில், நான்கு பேரும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென ஈரானிய கடற்கொள்ளையர்கள் வந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாவீரன் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தாக்குதலில் சங்கர், பால்ராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்ட அவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலைக்காக சென்ற மீனவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மாவீரனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், காயமடைந்த 3 மீனவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Previous

வீட்டை சுத்தம் செய்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

Read Next

நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்: அமித் ஷா கடிதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular