மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சாப்பிட சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக உருளைக்கிழங்கு அடையை செய்து பார்க்கலாம். பருப்பு வகைகள் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த அடை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரிசி – 2 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
மசூர் பருப்பு – 1½ கப்
உளுத்தம் பருப்பு – ½ கப்
காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
மிளகு – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உருளைக்கிழங்கு – 2 (மெல்லியதாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் அனைத்து பருப்பு வகைகளையும் நன்றாக கழுவி, காய்ந்த மிளகாயுடன் சேர்த்து தண்ணீரில் சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஊற வைத்த பொருட்களுடன் பச்சை மிளகாய் மற்றும் மிளகு சேர்த்து, சிறிது கொரகொரப்பாக அரைத்து மாவாக தயார் செய்து கொள்ளவும்.
இந்த மாவை சுமார் 5 மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், மாவை அடை போல் தடிமனாக ஊற்றவும். அதன் மேல் மெல்லியதாக நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை ஆங்காங்கே வைத்து, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுத்தால், சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு அடை தயார்.
மாலை நேர சிற்றுண்டியாகவும், காலை உணவாகவும் இந்த சத்தான உருளைக்கிழங்கு அடையை பரிமாறலாம்.




