அரிய வகையைச் சேர்ந்த குரங்குடன் நடிகர் விக்ரம் இருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட வனத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காணொலியில் இடம்பெற்றுள்ள குரங்கை யார் வளர்த்து வருகிறார்கள், அதற்கான சட்டப்பூர்வ அனுமதிகள் உள்ளனவா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குரங்கின் உரிமையாளர் எனக் கூறப்படும் கேசவநாதனுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குரங்கை வளர்ப்பதற்கான உரிய ஆவணங்கள் அல்லது அனுமதி தொடர்பான பதிவுகள் இருந்தால், அவற்றை இன்று (ஆகஸ்ட் 13) மாலைக்குள் வனத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே குரங்கை வளர்ப்பது சட்டப்பூர்வமானதா என்பது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




