அசைவ உணவுகளை விரும்புபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில் காளானுக்கு தனி இடம் உள்ளது. இறைச்சியைப் போன்ற மென்மையான அமைப்பும், தனித்துவமான சுவையும் கொண்ட காளான், பலரின் விருப்பமான உணவுப் பொருளாக உள்ளது.
சுவை மட்டுமின்றி, காளானில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக ரிபோஃப்ளேவின் (Vitamin B2), நியாசின் (Vitamin B3), பாந்தோத்தேனிக் அமிலம் (Vitamin B5), பயோட்டின் (Vitamin B7) போன்ற பி-வகை வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன.
இந்த சத்துக்கள் உடலில் ஆற்றல் உற்பத்தி, வளர்சிதை மாற்றம், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாடு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
அதேபோல், புரதச்சத்து நிறைந்த பட்டாணியுடன் காளானை சேர்த்து தயாரிக்கும் காளான் பட்டாணி மசாலா, சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சிறந்த உணவாக அமையும். இதை சாதம், ரொட்டி, சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
- வேகவைத்த பச்சை பட்டாணி – ½ கப்
- காளான் – 200 கிராம்
- நெய் – 2 ஸ்பூன்
- சீரகம் – ½ ஸ்பூன்
- வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1 (கீறியது)
- இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- அரைத்த தக்காளி – ½ கப்
- உப்பு – தேவையான அளவு
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
- மல்லித் தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து விழுதாக தயார் செய்யவும்.
காளானை நன்றாக சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கவும்.
பின்னர் அரைத்த தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
அதில் கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
பிறகு வேகவைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய காளானை சேர்த்து மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் மூடி வைத்து காளான் மென்மையாகும் வரை வேகவிடவும்.
காளான் வேகும்போது அதிலிருந்து இயற்கையாகவே தண்ணீர் வெளியேறும் என்பதால் அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
காளான் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, அதிக தீயில் சிறிது நேரம் கிளறி வதக்கவும். கிரேவி தேவையான பதத்திற்கு வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான மற்றும் சத்தான காளான் பட்டாணி மசாலா தயார்!
இதை சப்பாத்தி, நாண், ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.




