உலகின் பல நாடுகளில் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிவது வழக்கமாகிவிட்டது.
போக்குவரத்து சிக்னல்கள், சாலை விதிகள் என பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், பல இடங்களில் நெரிசலுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. ஆனால், உலகில் ஒரு வித்தியாசமான நாடு உள்ளது. அங்கு போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமலேயே வாகன போக்குவரத்து சீராக நடைபெறுகிறது.
அந்த நாடு தான் பூட்டான்.
பூட்டானில், குறிப்பாக தலைநகர் திம்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், போக்குவரத்து சிக்னல்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற போக்குவரத்து காவலர்கள் கை சைகைகள் மூலம் வாகனங்களை ஒழுங்குபடுத்துகின்றனர்.
1990-களில் திம்புவில் போக்குவரத்து சிக்னல்களை அமைக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவை அகற்றப்பட்டு, மீண்டும் மனிதர்களால் கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து முறை தொடரப்பட்டது.
பூட்டானின் சாலைகள் மற்றும் வட்டச் சந்திப்புகள் வாகன ஓட்டத்தை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், அந்நாட்டின் மலைப்பாங்கான நில அமைப்பு வாகனங்களின் வேகத்தை இயற்கையாகவே குறைக்க உதவுகிறது.
அதுமட்டுமின்றி, பூட்டான் மக்கள் போக்குவரத்து ஒழுக்கத்தை அதிகம் கடைப்பிடிப்பவர்களாக உள்ளனர். சாலை விதிகளை மதிப்பது, பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, தேவையில்லாமல் ஹாரன் அடிக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பூட்டான், வாகனங்களின் எண்ணிக்கையையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், உலகின் பல நாடுகளைப் போல அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதில்லை.
தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், மனிதர்களின் ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வும் போக்குவரத்தை சீராக இயக்க முடியும் என்பதற்கு பூட்டான் ஒரு வித்தியாசமான உதாரணமாக திகழ்கிறது.




