தெலங்கானா சூர்யாபேட்டை மாவட்டத்தில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதே மண்டலம் பீக்கா தண்டா பகுதியைச் சேர்ந்த ராமாவாத் பூபா மற்றும் நாகுலு கொலை செய்யப்பட்ட நிலையில், காவலர் ஷரீஃப் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், நாகுலுவின் மனைவி பூபாவுக்கும் காவலர் ஷரீஃபிற்கும் இடையே நீண்டகாலமாக தகாத உறவு இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த உறவு தொடர்பான பிரச்சினையே இரட்டைக் கொலைக்கு காரணமாக இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
சம்பவத்தன்று இரவு நாகுலு அங்கு சென்றபோது, பூபா மற்றும் ஷரீஃப் இடையேயான உறவு தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற ஷரீஃப், காவல் நிலையத்துக்குச் சென்று சில பழைய குற்றவாளிகளை அழைத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு நாகுலு மற்றும் பூபா கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நபர்களின் தொடர்பு மற்றும் கொலைக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.




