3 வயது சிறுவன் கடத்தல்: ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற 7 பேர் கைது!

 

பீகாரில் 3 வயது சிறுவனை கடத்தி, பஞ்சாபைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.3 லட்சத்திற்கு விற்க முயன்றதாக பெண் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஹர்ஜேந்தர் குமாரின் 18 வயது மகன் கடந்த 2025-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது மனைவிக்காக வேறொரு குழந்தையை தத்தெடுக்க குடும்பத்தினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் வேலை செய்த நீலம் என்ற பெண், பீகாரில் இருந்து குழந்தையை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து பீகாரில் உள்ள இடைத்தரகர் மூலம் 3 வயது சிறுவனின் புகைப்படம் பெறப்பட்டு, அவனை ரூ.3 லட்சத்திற்கு விற்க திட்டமிடப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இடைத்தரகரும் அவரது 15 வயது மகளும் அவனை அழைத்துச் சென்று காரில் ஏற்றியுள்ளனர்.

சிறுவன் காணாமல் போனது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் இருப்பிடத்தை வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போஜ்பூர் மாவட்டம் ஆரா நெடுஞ்சாலையில் கார் மறிக்கப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். ஹர்ஜேந்தர் குமார், டிரைவர் ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.2.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குழந்தை கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தகாத உறவு விவகாரத்தில் தம்பதி கொலை: காவலர் மீது குற்றச்சாட்டு!

Read Next

வைரலான ‘ஆசிரியர்-மாணவர்’ வீடியோவின் உண்மை பின்னணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular