திண்டுக்கல் அருகே பாடியூர் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியையை தாக்கியதாக தவெக பிரமுகர் பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் பாலமுருகன், கணக்கெடுப்பு பணியின்போது ஆசிரியையிடம் “எதற்காக விவரங்களை கேட்கிறீர்கள்?” என கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, ஆசிரியையை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆசிரியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.




