வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 நடைமேடைகளுக்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரயில் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அடுத்தகட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் புறநகர் ரயில் நிலையத்தையும் நேரடியாக இணைக்கும் வகையில் நடைபாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்தால் பயணிகளுக்கு இரு போக்குவரத்து வசதிகளையும் எளிதாக பயன்படுத்த முடியும்.
மேலும், ரயில் நிலையத்தின் பராமரிப்பு தொடர்பாக தமிழக அரசுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் தீபாவளி காலத்தில் கிளாம்பாக்கம் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




