
இந்து மத வழிபாட்டில் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் இந்த மாதத்தில் தான் தீபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை மாதம் வந்து விட்டாலே தொடர்ந்து மார்கழி தை என வரிசையாக தெய்வங்களுக்கு முக்கியமான மாதங்களாக இருக்கிறது. இந்த கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு உரியதாகும். இந்த கார்த்திகை மாதம் வரக்கூடிய சோமவார விரதம் எப்படி கடைப்பிடிப்பது சிவனை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றி இனி காண்போம்.
கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமைகளை சோமவாரம் என்று கூறுவர். இந்த சோமவார திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்ததாகும். இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட தலையெழுத்து கூட மாறி வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். தேவர்கள் முனிவர்கள் அரசர்கள் உள்ளிட்ட பலரும் சோமவார விரதத்தை கடைப்பிடித்து அளவில்லாத பலனை பெற்றுள்ளனர் கூறப்படுகிறது.
சோமவார விரதத்தன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு காலை முதலே உபவாசமாகவோ அல்லது ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டோ விரதம் இருக்கலாம். அன்றைய தினம் யாருக்காவது உணவு தானமாக வழங்க வேண்டும். மாலையில் சிவாலயங்களுக்கு சென்று சிவனை வழிபட்டு வரலாம். பின்னர் வீட்டில் சிவபெருமான் படத்திற்கு முன்பு பழம் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதாவது இனிப்பு வகைகளைப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
நீங்கள் என்ன வேண்டுதல் வைத்திருக்கிறீர்களோ என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை ஒருமனதாக மனதில் வைத்து மனம் உருகி சிவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு நம்முடைய விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி கார்த்திகை மாதம் வரக்கூடிய அனைத்து திங்கட்கிழமைகளையும் சோமவார விரதத்தை கடைபிடிக்கும் போது நிச்சயமாக அதனுடைய பலன் அதிகமாக இருக்கும். உங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்.