பொதுவாக நாம் எல்லோருக்கும் மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். மீன்குழம்பு வீட்டில் வைத்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
அதிலும் நெத்திலி மீன் குழப்பு என்றாலே அதன் வாசனையும் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த நெத்திலி மீன் குழம்பை மண் சட்டியில் கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் – அரை கப்
- சீரகம் – 2 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – அரை தேக்கரண்டி
- வெந்தயம் – அரை தேக்கரண்டி
- வெங்காயம் – அரை கப்
- பச்ச மிளகாய் – 4
- இஞ்சி – அரை தேக்கரண்டி
- தக்காளி – ஒரு கப்
- மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
- மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
- தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- புளி தண்ணீர் – அரை கப்
- நெத்திலி – தேவையான அளவு
- கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் ஒரு மிக்ஸியில் தேங்காய், சீரகம் மற்றும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடாகியதும் கடுகு வெங்காயம், வெந்தயம், பச்ச மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்டை போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்றாக பொன்நிறம் வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு போன்றவற்றை போட்டு வதக்க வேண்டும்.
இதன் பின்னர் அரை கப் புளி தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்க்க வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு துப்பரவு செய்த நெத்திலி மீனை போட்டு மீன் உடையாமல் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் நாவூறும் சுவையில் நெத்தலி மீன் குழம்பு தயார்.