
ஒன்றை_மட்டும்_பின்பற்று..!
அது இயற்கையான சூழலில் அமைந்த ஒரு குருகுலம்.
அருகே மலைப்பகுதி, சிற்றோடை, பூஞ்சோலை, பழத்தோட்டம் காய்கறி மற்றும் கால்நடை வளர்ப்பு.
பல சீடர்கள் அங்கு தங்கி ஆரோக்கியத்துடன் கல்வி பயின்றனர்.
குரு கண்டிப்பானவர். தத்துவங்கள் போதிப்பதில் வல்லவர். அதனால் சீடர்கள் அவரிடம் பயபக்தியுடன் நடந்து கொண்டனர்.
பாடம் நடத்துவதில் குரு ஒரு விஷயத்தை பின்பற்றுவார். ஒரு நாளைக்கு ஒரே ஒரு பாடம் மட்டும் நடத்துவதே அந்த முறை. அதை சீடர்களுக்கு தெளிவாக புரியும்படி நடத்துவார். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல பாடங்களை நடத்துவதை அவர் விரும்புவதில்லை.
ஆனால், ஒரே ஒரு சீடனுக்கு அந்த முறை பிடிக்கவில்லை. ஒரு முறை நடத்திய பாடத்தையே திரும்பத் திரும்ப அவர் நடத்துவதை அவன் வெறுத்தான். குருவின் மேல் அவனுக்கு கோபம் கூட வந்தது.
ஒரு நாள் அவன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியே விட்டான்.
“குரு அவர்களே! ஒரே பாடத்தை திரும்பத் திரும்பக் கேட்பதால் அது மனதில் நன்கு பதியும் என்பது உண்மைதான். அதேசமயம் அது சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஒரே நேரத்தில் பல விஷயங்களை பலவிதமான உதாரணங்களுடன் கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கும் அல்லவா!” என்றான் அந்த சீடன்
குரு அவனை அமைதியாகப் பார்த்தார்.
எழுந்து தோட்டத்தின் மூலைக்குப் போனார். பெரிய பஞ்சாரக் கூடையை திறந்துவிட்டார். உள்ளே அடைக்கப்பட்டிருந்த பத்து கோழிகள் விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின.
“அந்த பத்துக் கோழிகளையும் பிடித்து வா!” என்று அந்த சீடனுக்கு கட்டளையிட்டார் குரு.
“அவ்வளவுதானே! இதோ ஐந்தே நிமிடத்தில் பிடித்துக் கொண்டு வருகிறேன்!” என்று சொல்லி விட்டு கோழிகளை துரத்திக்கொண்டு ஓடினான்.
ஆள் துரத்துவதைக் கண்டதும் கோழிகள் சிதறி பல திசைகளில் ஓடின.
சீடன் விடாமல் அவற்றை துரத்தினான்.
கோழிகள் சிக்கவில்லை.
சீடனும் விடவில்லை.
நேரம் ஓடியது.
ஓடி ஓடி ஒரு கோழியைக் கூடப் பிடிக்க முடியாமல் களைத்துப் போனான் சீடன்.
குரு பார்த்தார்.
“அந்தக் கறுப்பு நிறக் கோழியை மட்டும் பிடி!” என்றார்.
சீடன் அந்த கருப்பு நிறக் கோழியை நோக்கிப் பாய்ந்தான். அதையே குறிவைத்து விரட்டினான். கறுப்பு நிறக் கோழி களைத்தது. சில நிமிடங்களிலேயே சீடன் அதை அமுக்கிப் பிடித்தான்.
அவன் முகத்தில் புன்னகை.
குரு அவனை தீர்க்கமாகப் பார்த்தார்.
அவனும் குருவைப் பார்த்தான்.
குரு சொன்னார்:
“ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று. அதில் வெற்றி கிடைக்கும். ஒரே நேரத்தில் பல செயல்களைப் பின்பற்றினால் எல்லாக் கோழிகளையும் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது போல, எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்!”
சீடன் திடுக்கிட்டான்.
குருவின் கல்விமுறை அப்போது தான் அவனுக்குத் தெளிவானது.
#தத்துவம்:
ஒரே நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஒரே நேரத்தில் பலவற்றைப் பின்பற்றினால் அவை எல்லாவற்றையும் இழந்து தோல்வியைத் தழுவ நேரிடும்.