இலவச அமரர் ஊர்திகளில் வெகு தூரம் ஒரே ஊர்தி மூலம் கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், அமரர் ஊர்தியை மாற்றும் போது உறவினர்கள் வருத்தம் அடைந்து பேசுவதால், அமரர் ஊர்தியில் ஏற்றும் உடல்களை அவர்களின் வீட்டில் இறக்கி வைக்கும் வகையில் மீண்டும் அனுதிக்க வேண்டும் என இஎம்ஆர்ஐ அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இலவச அமரர் ஊர்தி வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர்கள் இன்று (செப்.15) சென்னை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அமரர் ஊர்தி ஓட்டும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வை தனியார் நிறுவனம் குறைத்து வழங்குவதாகவும், தங்களுக்கான 6 சதவீதம் ஊதிய உயர்வை தனியார் நிறுவனம் வழங்காமல் உள்ளது எனவும் குற்றஞ்சாட்டினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேஷ், ” ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை தனியார் நிறுவனம் தொடர்ந்து குறைத்து வருகிறது. அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பெறுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அதன் படி தனியார் நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், ஊதியத்தில் 6 சதவீதம் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
அமரர் ஊர்தி ஒட்டுநர்களுக்கு பிஃஎப் நிதிக் கணக்கை சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். அதனை மீண்டும் சென்னையில் வைக்க வேண்டும் என கேட்டுள்ளாேம். மேலும், தங்களுக்கு பிஃஎப் கணக்கை மாற்றுவதால் பாதிப்பு எதுவும் வராது என்பதை கடிதமாக அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் உடல்களை ஒரே வாகனத்தில் ஏற்றி சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. உயிரிழந்தவர்களின் உடலை வெகு தூரம் சென்று ஒப்படைக்கும் சூழ்நிலையில், அவற்றை குறைந்தது மூன்று வாகனங்களுக்கு மாற்றி கொண்டு செல்லும் நடைமுறை இருக்கிறது.
இது போன்று செயல்படுவதால் துயரத்தில் இருக்கும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், அந்த நேரத்தில் உறவினர்கள் வருத்தம் அடைந்து பேசுவதால் சங்கடம் ஏற்படுகிறது. எனவே, உடலை அமரர் ஊர்தியில் ஏற்றினால் அதே ஊர்தியில் உடலை அவரது வீட்டிற்கு வரை கொண்டு செல்லும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.




