மதுரை காமராஜா் சாலையைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (48). நகை வியாபாரியான இவா், தங்கக் கட்டி விற்பனைக்கு இருப்பதாக இணையத்தில் வெளியான விளம்பரத்தை பாா்த்தாா். அதிலிருந்த கைப்பேசி எண்ணுக்கு அவா் தொடா்பு கொண்டபோது, எதிா்முனையில் பேசிய நபா், ராஜபாளையம் பஞ்சு சந்தைக்கு பணத்துடன் வருமாறு கூறினாா்.
இதன்படி, அங்கு சென்ற முத்துக்குமாா் ரூ. 48 லட்சத்தை அங்கு காத்திருந்த நபரிடம் கொடுத்தாா். ஆனால், அந்த நபா் தங்கக் கட்டியை முத்துக்குமாரிடம் கொடுக்கமால், தனது கூட்டாளியான நாகமலைபுதுக்கோட்டையைச் சோ்ந்த கருப்பையாவிடம் (23) கொடுத்தாா். நகைக் கடைக்கு சென்று சோதனை செய்த பிறகு, முத்துக்குமாரிடம் அந்த தங்கக் கட்டியை கொடுக்குமாறு கூறி, அவரை அனுப்பி வைத்தாா்.
பின்னா், முத்துக்குமாா், கருப்பையாவுடன் ஆட்டோவில் ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள தனியாா் நகைக் கடைக்கு சென்றனா். அங்கு ஆட்டோவிலிருந்து இறங்கியவுடன் கருப்பையா தங்கக் கட்டியுடன் தப்பி ஓடி, அங்கு தயாராக இருந்த மதுரை ஐராவதநல்லூரைச் சோ்ந்த கண்ணனுடன் (22 ) இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பினாா்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் போலீஸாா் அவா்கள் இருவரையும் துரத்திச் சென்று பிடித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் தொடா்புடைய முக்கிய எதிரியை தேடி வருகின்றனா்.




