ஒரு அணியின் வெற்றி தங்கியிருப்பது அணி உறுப்பினர்களின் மனப்பாங்கினால் ஆகும். அது அவர்களின் திறமைக்கும் மேலானது.
ஒரு குழுவின், கூட்டத்தின் வெற்றி அதன் உறுப்பினர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை; அவர்களின் மனப்பாங்கு, ஒத்துழைப்பு, மரியாதை, நம்பிக்கை, ஊக்கம் போன்றவையும் சம விகிதத்தில் இருத்தல் அவசியம்.
எதிர்மறையான சிந்தனை, செயற்பாடு, கபடத்தனம், ஒத்துழையாமை போன்ற எதிர்மறை அணுகுமுறை ஒரு “நச்சு” போல; அது பரவி, வல்லவர்களையும் செயலிழக்கச் செய்யும். எனவே தலைவர்களின் கடமை வெறும் திறமைகளைச் சேர்ப்பது அல்ல; நல்ல சூழலை உருவாக்கி, ஊக்கமளிக்கும் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.
இதனை நம் வாழ்க்கையிலும், அலுவலகங்களிலும், சமூகப்பணிகளிலும் பயன்படுத்தலாம். திறமையான ஒருவருக்கு நட்பு, ஒத்துழைப்பு, நேர்மை, பொறுமை இல்லையெனில் அவரது குழு தள்ளாடும். ஆனால் குறைந்த திறமையுடன் கூட நல்ல மனப்பாங்குள்ளவர்கள் சேர்ந்தால் வெற்றி எளிதில் கிடைக்கும்.
குழுவாகச் செயல்படுவது நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. வேலைத்தளங்கள், கல்விக்கழகங்கள், விளையாட்டு அணிகள் – எதிலும் பலர் இணைந்து செயல்படும் சூழல் காணப்படுகிறது. ஆனால் இத்தகைய சூழலில் ஒரே ஒரு உறுப்பினர் கூட எதிர்மறை அணுகுமுறையுடன் நடந்துகொண்டால், முழுக் குழுவின் செயல்திறன் பாதிக்கப்படுவது ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டில் Will Felps, Terence Mitchell மற்றும் Eliza Byington ஆகியோர் “How, When, and Why Bad Apples Spoil the Barrel” என்ற புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். இக்கட்டுரை ஒருவரின் எதிர்மறை நடத்தை குழுவின் செயல்பாட்டில் எவ்வாறு பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் விளக்கியது.
எதிர்மறை நடத்தை வகைகள்
ஆய்வில் குறிப்பிடப்பட்ட முக்கியமான “பழுதடைந்த பழம்” (Bad Apple) நடத்தைகள் மூன்று:
1. பணியில் சோம்பல் / ஒழுங்கின்மை – தன் பங்கினைச் செய்யாமை அல்லது கவனக்குறைவு.
2. கிண்டல், கேலி – பிறரை அவமதிக்கும், ஊக்கம் கெடுக்கும் கருத்துக்கள்.
3. எப்போதும் எதிர்மறை மனநிலை – நம்பிக்கையற்ற, சோர்வூட்டும் நடத்தை.
இது குழுவின் செயல்திறனில் ஏற்படுத்திய தாக்கம்.
ஒரே ஒரு எதிர்மறை உறுப்பினர் கூட இருந்தால், மற்றவர்கள் அதனை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆற்றலும் நேரமும் வீணாகிறது.
மனஅழுத்தம், சலிப்பு, பாதுகாப்பான (defensive) பதில்கள், உறவுகளில் பிளவு ஆகியவை உருவாகின்றன.
குழுவின் உற்சாகம், படைப்பாற்றல், ஒருங்கிணைப்பு ஆகியவை குறைகின்றன.
பல இடங்களில் 30–40% வரை செயல்திறன் குறைகிறது என்று அறியப்பட்டது. “நேர்மறை நடத்தை விட எதிர்மறை நடத்தை அதிக தாக்கம் செய்கிறது” என்ற உண்மையைக் காட்டி நின்றது.
ஒரு உற்பத்தி நிறுவனத்தின் 50 குழுக்களை ஆய்வு செய்தபோது, “ஒரு உறுப்பினர் முரணானவர் அல்லது பொறுப்பற்றவர்” எனில் அந்தக் குழுவின் செயல்திறன் கணிசமாக குறைந்தது.
நிறுவன மட்டத்திலான (corporate) தரவுகள், ஒரு “toxic worker” இருந்தால், சக ஊழியர்கள் 54% அதிக வாய்ப்பில் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்பதை காட்டின.
இந்த உண்மை நம்மை ஒரு பெரிய தத்துவ உண்மைக்குக் கொண்டுச் செல்கிறது:
– ஒரே ஒரு எதிர்மறை மனப்பாங்கு கூட, கூட்டுக் கண்ணோட்டத்தை (collective spirit) சிதைத்து விடும்.
– எதிர்மறை ஆற்றல், நேர்மறை ஆற்றலைவிட வேகமாக பரவுகிறது.
– குழுவின் வெற்றிக்கு திறமையோ திறனோ மட்டும் போதாது; ஒவ்வொருவரின் நடத்தை, அணுகுமுறை, மனநிலை என்பனவும் சம அளவு முக்கியம்.
ஒரு பழுதடைந்த பழம் கூட, முழுக் கூடைப் பழங்களை கெடுக்கும். அதுபோல ஒரே ஒரு எதிர்மறை உறுப்பினர், குழுவின் செயல்திறனையும் உற்சாகத்தையும் குறைத்து விடுவார். ஆகவே, எந்தக் குழுவிலும் தலைமைத்துவம் காட்டுவோரின் கடமை – எதிர்மறை நடத்தை அடையாளம் கண்டு, அதை குறைக்கும் நடைமுறைகளை உடனடியாக உருவாக்குவதே. இதன் மூலம் மட்டுமே குழுவின் முழுப் பலமும் வெளிப்பட்டு, வெற்றி பெற முடியும்.




