தொண்டை வலி ஏற்பட்டால் மக்கள் பலர் பொதுவாகச் சொல்லுவது உள்நாக்கு வளர்ந்திருக்கு எனவும், சிலர் ரொன்சில்ஸ் வந்திருக்கு எனவும் கூறுவார்கள்.
உச்சி மயிர் இழுத்தால் சரியாகிவிடும்” என்று நம்பி வீட்டுவழி முறைகளில் மட்டும் நின்றுவிடாமல், ஒரு மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானதும் புத்திசாலித்தனமானதும் ஆகும்!
தொண்டை வலி என்பது நம்மில் பலருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினை. ஆனால், அந்த வலியின் பின்னால் இருக்கும் காரணங்களைப் பற்றி பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை. குறிப்பாக “உள்நாக்கு வளர்ந்திருக்கு”, “ரொன்சில்ஸ் வந்திருக்கு” போன்ற சொற்கள் கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் பொதுவாகக் கேட்கப்படுகின்றன.
இந்த இரண்டு நிலைகளும் ஒன்றே என்று பலர் நினைத்தாலும், உண்மையில் அவை வேறுபட்ட உடல் அமைப்புகளையும் வேறுபட்ட அழற்சி நிலைகளையும் குறிக்கின்றன.
உள்நாக்கு அல்லது அண்ணாக்கு (Uvula) என்பது தொண்டையின் நடுப்பகுதியில் கீழே தொங்கிக் காணப்படும் சிறிய தசைத் துண்டாகும். சாதாரணமாக இது சிறிய அளவில் இருக்கும். ஆனால் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், இந்த பகுதி சிவந்து வீங்கி பெரிதாகலாம். அப்போது அது நீளமாகத் தோன்றி நாக்கின் பின்புறத்தைத் தொடும் அளவுக்கு கீழிறங்கியிருக்கலாம்.
இதனால் விழுங்கும்போது தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்ற உணர்வு தோன்றும். இதையே பலர் “உள்நாக்கு வளர்ந்திருக்கிறது” என்று கூறுகிறார்கள். மருத்துவத்தில் இந்த நிலை “Uvulitis” என அழைக்கப்படுகிறது.
மற்றுபுறம், ரொன்சில்ஸ் (Tonsils) என்பது தொண்டையின் இருபுறங்களிலும் காணப்படும் நிணநீர் திசுக்களாகும். இவை உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்த்து போராடும் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுகின்றன. கிருமித் தொற்று ஏற்பட்டால், இந்த திசுக்கள் வீங்கி சிவந்து வலியுடன் காணப்படும். இதுவே “Tonsillitis” எனப்படும் நிலை. சில நேரங்களில் வெள்ளை புள்ளிகள் அல்லது சீழ் போன்ற தோற்றமும் ரொன்சில்ஸில் காணப்படலாம்.
இந்த இரண்டு நிலைகளுக்கும் ஒரே மாதிரியான சில அறிகுறிகள் இருப்பதால் மக்கள் குழப்பமடைகிறார்கள். குறிப்பாக எச்சிலை விழுங்கும்போது வலி, தொண்டையில் அடைப்பு உணர்வு, பேசுவதில் சிரமம் போன்றவை இரண்டிலும் தோன்றலாம்.
ரொன்சில்ஸ் கடுமையாக வீங்கும்போது, அதன் தாக்கம் நடுவில் உள்ள உள்நாக்கையும் பாதித்து அதையும் சிவக்கச் செய்து பெரிதாக்கும். இதனால் கண்ணாடியில் பார்க்கும்போது உள்நாக்கு மிகவும் நீளமாகத் தெரிவதால், “உள்நாக்கு வளர்ந்திருக்கிறது” என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.
சில பகுதிகளில், தொண்டை வலி ஏற்பட்டால் தலையின் உச்சியில் உள்ள முடியைப் பிடித்து இழுக்கும் பழக்கம் இன்னும் காணப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாக தலைமுறைகளாக தொடர்கிறது.
முடியைப் பிடித்து திடீரென இழுக்கும் போது “டக்” அல்லது “பக்” போன்ற ஒரு சத்தம் கேட்கும். இதனால் தொண்டையில் இருந்த வலி குறைந்துவிட்டதாக சிலர் உணர்கிறார்கள்.
ஆனால், இதற்கான அறிவியல் விளக்கம் வேறுபட்டது. தலையின் மேற்பகுதியில் உள்ள தோலுக்கும் மண்டையோட்டுக்கும் இடையில் மெல்லிய திசுப் படலம் ஒன்று உள்ளது. முடியை இழுக்கும் போது அந்த பகுதி லேசாக அசைந்து மீண்டும் ஒட்டும் போது சத்தம் உருவாகலாம். மேலும், திடீர் வலியை உடல் உணரும்போது, மூளை இயற்கையான வலிநிவாரண ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால் சில நிமிடங்களுக்கு வலி குறைந்தது போல உணரப்படலாம். ஆனால் உண்மையில் தொற்றோ அழற்சியோ குணமாகிவிடுவதில்லை.
தொண்டை வலி எப்போதும் சாதாரண சளி காரணமாக மட்டுமே வராது. சில நேரங்களில் அது ஆபத்தான நோய்களின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். குறிப்பாக Diphtheria (தொண்டை அடைப்பான்), Epiglottitis போன்ற நோய்கள் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அபாயகரமான நிலைகளாகும்.
மூச்சு விட சிரமம், அதிக காய்ச்சல், கடுமையான தொண்டை வலி, உணவு விழுங்க முடியாமை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வீட்டு வைத்தியங்கள் சில நேரங்களில் தற்காலிக நிம்மதியைத் தரலாம். ஆனால் அவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இருக்க முடியாது. குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், உடல் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோரிடம் தொண்டை தொற்றுகள் வேகமாக மோசமடைய வாய்ப்பு உள்ளது.
எனவே, தொண்டை வலி ஏற்பட்டால் மூடநம்பிக்கைகள் அல்லது பாரம்பரிய முறைகளில் மட்டும் நம்பிக்கை வைக்காமல், சரியான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம். உடனடி கவனமும் சரியான சிகிச்சையும் பல ஆபத்துகளைத் தவிர்க்க உதவும்.




