நீங்கள் கவனித்ததுண்டா …
சமையலறையில் அவள்
வியர்வையில் குளிக்கையில்
“துடைத்துக் கொள்” என்று
நீங்கள் நீட்டும் கைக்குட்டையில்
அவள் மொத்தக் களைப்பும்
துடைக்கப்படுவதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
அவள் சோர்வாய் இருக்கையில்
நெற்றியில் கை வைத்து
“காய்ச்சலா” என்ற கரிசனத்தில்
அவள் குளிர்ந்து போவதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
அவள் சமையலை ரசித்து ருசித்து
“சூப்பர்” எனும் போது
அவள் வயிறு நிரம்புவதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
சாப்பிட அமரும் போது
“நீயும் உட்கார்” எனும் வார்த்தையில்
அவள் அனைத்து உணர்வும்
சிலிர்த்துக் கொள்வதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
அவள் பேசுவதை நீங்கள்
ரசித்துக் கேட்டால்
சிறு குழந்தையாய் அவள்
சிலாகித்துப் போவதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
பொன், பொருள், உடை என
வாங்கித்தரும் பொழுதை விட
முழம் பூவை தலையில் வைத்து
நெற்றி முத்தமிடுகையில் அவள்
ஆனந்தப் பரவசம் அடைவதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
யாரிடமும் அவளை
விட்டுக் கொடுக்காத போது
உங்களுக்காக உயிரையும் விட
தயாராகி நிற்பதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
அவளிடம் மனம் விட்டு
சிரித்துப் பேசும் போதெல்லாம்
கவலையற்ற ஜீவனாய்
அவள் மாறிப் போவதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
வெளியிலோ வீட்டிலோ
வரும் பிரச்சினைகளால்
நீங்கள் தளர்ந்து நின்றால்
அவள் துவண்டு போவதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
அவள் மீது நீங்கள்
அக்கறை கொண்டவர் எனும்
எண்ணத்தால் –
அவள்
தன்னை பலசாலியாகவும்
பாக்கியசாலியாகவும்
இறுமாந்து கொள்வதை !
நீங்கள் கவனித்ததுண்டா …
நீங்கள் எங்கிருந்தாலும்
அவளின் ஏழாம் அறிவும்
மூன்றாம் கண்ணும்
எப்போதும் உங்களை
கவனித்துக் கொண்டே இருப்பதை !
கவனியுங்கள் கணவர்களே …
மனம் நிறைந்த இணையரின்
அரவணைப்பும் ஆறுதலும்
அன்பும் ஆதரவும் மட்டும்
அவ்வப்போது வேண்டி –
இதயம் ஒன்று உங்களுக்காக
இயங்கிக் கொண்டிருப்பதை !!
வாழ்க்கை வாழ்வதற்கே..
அதை அனுபவித்து சந்தோஷமாக வாழுங்கள்.




