சாப்பாட்டு மேசையில் அமர்ந்து உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த காயத்ரியின் கையிலோ கைப்பேசி. காதலன் அரிச்சந்திரனுடன் ரகசிய தகவல் பரிமாற்றம்
அவள் கழுத்தில் தொங்கியது ஒரு கருகமணி மாலை. அது தவறுதலாய் அவள் கை பட்டு அறுந்து விழ , அவை அங்கும் இங்குமாய் சிதறி ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தன.
“ஐயோ! அம்மா ” என அலறினாள் அந்த 16 வயதான காயத்ரி.
மகளின் அழுகுரல் கேட்டு தலைத் தெறிக்க ஓடி வந்தார் தந்தை தயாநிதி.
என்னவென்று தெரியாமல் அவரது இதயம் டைப் அடிக்க ஆரம்பித்தது. உடலில் நடுக்கம். ‘தானாடாவிட்டாலும் தன் தசையாடும்’ என்பார்களே அதுபோல.
ஆனால் அங்கு நடந்த விவரம் தெரிந்து அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார் அந்த அன்பு தந்தை. அவரது சிரிப்பால் மகளின் அழுகை மேலும் பெரிதானது.
” என்னடா சாதாரண கருகமணி தானே ? புதுசா வாங்கிக்கிட்டா போச்சு.. அப்பா வாங்கி தந்த தங்க சங்கிலிய கழுத்திலே போட்டு வை.. அது போதும் உனக்கு” என்றார்… அதை கேட்டதும் தாங்க முடியாமல் தலையை சுவற்றில் மோதிக்கொண்டாள் காயத்ரி.
அதைக் கண்ட தந்தை பதறி போய் அவசரமாய் தரையில் அமர்ந்து மணிகளை பொறுக்க ஆரம்பித்தார்.
தயாநிதியின் சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்த அம்மா மங்களம் “அடி பாவி மகளே! அம்மா சமைச்சு வச்ச சாப்பாட்டுல கருகமணிய கொட்டிட்டியா ?அது கருகமணியா? இல்ல கடுகா?ன்னு எப்படி நான் கண்டுபிடிப்பேன் ? சமைச்சது எல்லாத்தையும் கொட்ட வேண்டியதுதான்” புலம்பி தீர்த்தாள் மங்களம் .
“வாய மூடுடி! புள்ளையே அழுதுகிட்டு இருக்கா.. இதுல உன் புலம்பல் வேறு.. முடிஞ்சா நீயும் மணிகளை தேடித்தா” என்று கடிந்த கணவனின் வார்த்தைக்கு அடங்கி, இதோ அம்மாவும் தன் பணிகளை விட்டு தன் மகளுக்காக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த மணிகளை தேட ஆரம்பித்தாள்.
பொறுக்கி எடுத்த கருகமணிகள் இதோ காயத்ரியின் கையில் இடம் மாறி போக , குற்ற உணர்வு அவளை சுக்கு நூறாக உடைத்தது.
“அப்பா! நீங்கள் நினைப்பது போல் இது சாதாரண கருகமணி அல்ல .. என் காதலனால் என் கழுத்தில் போடப்பட்ட தாலி”.. என்று வார்த்தைகளை கொட்ட நாவோ துடிதுடிக்க, ஆனால் உதடுகள் மூடி அதை தடுத்தது. அவளது கண்ணீரால் கருகமணி ஈரமாகியது.
இது அறுந்ததனால் காதலன் அரிச்சந்திரனுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு இருக்குமோ ? என தாலி சென்டிமென்ட் அவளுக்கு தலை தூக்க ஆரம்பித்தது .
அம்மாவின் உதவியால் மணிகள் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொள்ள மீண்டும் அது அவளது தாலியானது.
இப்படி பெற்றோரை ஏமாற்றி கபட நாடகம் ஆடிய காயத்ரி, கலங்கி போனவளாய் கைபேசியில் அரிச்சந்திரனுக்கு அழைப்பு விட, தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் ஊருக்கு செல்வதாக சொல்லி பைக்கில் ஏறி சென்றவனுக்கு போகும் வழியில் பெரிய விபத்து ஏற்பட்டிருக்குமோ என பலவிதமான கற்பனை குதிரையை ஓட விட்டாள் காயத்ரி.
என்னவாயிற்று அன்பு காதலன் அரிச்சந்திரனுக்கு? உள்ளம் துடித்துடிக்க அந்த கருகமணி மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டு அவசரமாய் வீட்டை விட்டு கிளம்பினாள் கோயிலை நோக்கி.
மகள் கோவிலுக்கு செல்வதை அறிந்த தந்தை,
“அம்மா காயத்ரி! கோவிலுக்கு தானே போறே.. அப்பாவே கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன்“ என அப்பாவி தனமாய் சொல்லிவிட்டு அழைத்தும் சென்றார்.
கடவுள் சாட்சியாக காதலன் கருகமணியை தாலியென அவள் கழுத்தில் போட்டு விட்ட அதே கோவில் . மீண்டும் அந்த மாலையை கடவுளின் காலடியில் வைத்து தாமாகவே போட்டுக் கொள்ள எண்ணினாள் காயத்ரி.
தாலியாக உருமாறிய கருகமணி மீண்டும் அவளது கழுத்தில் ஏற , எது நல்ல நேரம்?குழம்பியது மனம்.
கோவில் அர்ச்சகரிடமே கேட்டு தெரிந்துக் கொள்வோம் என்றாலும், அங்கே வெள்ளி கிழமை சாமி தரிசனத்திற்காக சந்நிதானத்தில் அலை மோதியது கூட்டம்.
அவனை தேடியது கண்கள் . அவனது குரலை மீண்டும் கேட்க துடித்தது மனம்.. கும்பிட்டு கண்ணீர் மல்க கடவுளை வேண்டியது அவளது கைகள்.
அவளது வேண்டுதல் வீண் போகவில்லை.கோவிலுனுள் அவன். இதோ அவள் கேட்க ஏங்கிய அதே குரல். ஆனால் காதலன் கையிலோ புதிய கருகமணி மாலை.
அருகில் புதிய காதலி ”இந்த கடவுள் சாட்சியா இந்த கருகமணியை தாலியா நினைச்சு உன் கழுத்துல போட்டு விடறேன்”.என்று அந்த நவீன காலத்து அரிசந்திரன் அடுத்து ஒருத்தியை ஏமாற்றும் நாடகம் அங்கே அரங்கேறி கொண்டிருந்தது.
அரிச்சந்திரன் என்ற பெயரை வைத்திருக்கும் இவன் எதிர்மறையாய் ஒரு பொய்யானவனா?
அதிர்ந்தாள் காயத்ரி.
இதோ காயத்ரியின் கையிலிருந்த கருகமணிமாலை அவள் அறுத்ததனால் சிதறி விழுந்து கோவில் கருங்கல் தரையில் கரும்புள்ளிகளை வைத்துக் கொண்டிருந்தது
பெற்றவர்களை ஏமாற்றிய தனக்கு கடவுள் நல்ல பாடம் புகட்டி விட்டாரோ? இது நமக்கு அவசியம் கிடைக்க வேண்டிய தண்டனை தான் என அழுதுக் கொண்டே செய்வதறியாது “அப்பா” என வெகு சத்தமாக அலறினாள். அந்த குரல் கோவில் வாசலில் காத்துக் கொண்டிருந்த அப்பாவை கோவில் உள்ளே வரவழைத்ததோ?
“அம்மாடி ! உன் முகமே சரியில்லடா… அப்பாவுக்கு உன்னை தனியா விட்டுட்டு இங்கிருந்து போக மனசு வரல. என் புள்ளைய விட எனக்கு எது முக்கியம்?அதான் வீட்டுக்கு போகாம கோவில் வாசலிலே உனக்காக காத்துகிட்டு இருந்தேன். சாமி தரிசனம் கிடைச்சுதா?”.
என்றார் நடந்த நாடகம் தெரியாத அப்பாவி மனிதன்.
“ஏன் என்னெனு எதுவும் கேட்காதீங்கப்பா? என்னை மன்னிச்சிடுங்க. என் தெய்வம் கோவிலில் இல்லை.
என் வீட்டிலேயே இருக்கு என்பதை இப்ப நான் புரிஞ்சுகிட்டேன்..” எனக்கூறி இது நாள் வரை காதல் மோகத்தில் ஒரு நல்ல தகப்பனை ஏமாற்றியதை எண்ணி வெட்கப்பட்டு வருந்தி தந்தையை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் காயத்ரி.




