முதுமையில் மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி?
துப்பறியும் எழுத்தாளர்
இராஜேஸ்குமார்
சொல்வதை
கேளுங்கள்.
🌹👌💪
என் சமகால எழுத்தாளர்களோடு அவ்வப்பொழுது
நான்
செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம்.
அப்படி நான் அண்மையில்
பேசிய ஒரு பெண் எழுத்தாளர் என்னை விட சீனியர்.
நான் எழுத வந்த
காலகட்டத்தில்
அவர் தொடர்கதைகள் வராத
வார இதழ்களே
இல்லையென்று சொல்லலாம் .
அவருடைய வயது
முதுமையை
தொட்டுவிட்டாலும்
குரலில் அதே இளமையும்
கம்பீரமும் இருந்தது.
“எப்படி இருக்கீங்கம்மா?”
நான் கேட்ட
இந்த சிறிய கேள்விக்கு
அவர் சொன்ன நீண்ட பதிலில்
நாம் எல்லோரும் கற்றுக் கொள்ளக்கூடிய
அளவுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.
அவர் சொன்னார்.
“நான் ரொம்ப நல்லா இருக்கேன் ராஜேஷ் குமார்.
என்னோட வயசுக்கு
ஏற்ற மாதிரி
சின்ன சின்ன உடல் உபாதைகள் இருந்தாலும்
அதையெல்லாம் கண்டுக்காம நாட்களை சந்தோஷமா கழிச்சுட்டிருக்கேன்.
இந்த முதுமையை
சிலர் வேண்டாத விருந்தாளியாய் நினைச்சு
“எனக்கு வயசாயிடுச்சு இனிமே நான் என்ன பண்ண போறேன்னு
எதிர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு நாளையும் பயந்து ,
பயந்து வாழ்ந்துட்டு இருப்பாங்க. எனக்கு
அந்த பயமே கிடையாது.
பயம்ங்கிறது
நம்ம மனசுக்குள்ள இருக்கிற
ஓட்டடை மாதிரி.
அதையெல்லாம்
தைரியமா நேர்மறை எண்ணங்களோடு துடைச்சு சுத்தப்படுத்தனும்.
அப்புறம்
இன்னொரு முக்கியமான விஷயம் நாம் எதுக்கும்
எமோஷனல் ஆகக்கூடாது.
பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பாங்களோன்னு
நினைச்சு,
கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது.
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும்,
அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.
மத்தவங்க வளர்ச்சியைப் பார்த்து நாம் பொறாமைப்படாமே
அவங்களைப் பாராட்டணும்.
அப்படி பாராட்டும் போது
அவங்க அடைகிற
சந்தோஷத்தை
பார்த்து நாம் சந்தோஷப்படணும். அந்த சந்தோஷம் தான்
நம்ம உடம்பை
ஆரோக்கியமாக வெச்சிருக்கும்.
மனசு சந்தோஷமா இருக்கும் போது, நமக்கு
எந்த நோய் வந்தாலும் அது சீக்கிரமே குணமாயிடும்.
எனக்கு ரெண்டு தடவை ஹார்ட் அட்டாக் வந்தது.
நான் பயப்படலை .
அதுக்கு தீர்வான பைபாஸ் சர்ஜரியைப் பண்ணிகிட்டேன்.
இப்போ நல்லா இருக்கேன்.
ஹார்ட்ல எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
போன மாசம் மூட்டு வலி வந்து ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.
அப்பவும் சலிச்சுக்கலை.
எத்தனை வருஷமா
என்னை தாங்கி பிடித்து எத்தனையோ
இடங்களுக்கு கூட்டிட்டு போன என்னுடைய கால்களுக்கு நன்றிதான் சொன்னேன்.
மூட்டுக்கும்
முழங்காலுக்கும் போதுமான ஓய்வு கொடுத்துல
இப்ப நிம்மதியா இருக்கேன்”
மடை திறந்த வெள்ளம்
போல் பேசிக்கொண்டே போக,
அவர் பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
அவருடைய எழுத்தைப் போலவே தீர்க்கமாக இருந்தது.
அவருடைய
பெயரிலேயே
சிவனும் சங்கரியும் இருப்பதால் நூறாண்டுகளை கடந்தும்
ஆரோக்கியமாக
இருப்பார்.