முதுமையும் ஒரு வரமே என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

Oplus_131072

முன்னொரு காலத்தில் ஒரு மன்னன் தன் நாட்டிலுள்ள வேலை செய்ய முடியாத முதியர்களைத் தூக்கிச் சென்று, மலைப்பகுதியில் விட்டு விட வேண்டும் எனக் கடுமையான சட்டம் போட்டிருந்தான்.
இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை, நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது, ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்…
நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானான் மகன்.
தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடைய தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனேயே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்…
வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் இரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான்…
ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனைச் சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.
சாம்பலால் திரிக்கப்பட்ட கயிற்றினைக் கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்…
போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை…
அரசனின் போட்டி பற்றி அறிந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான்.
போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிற்றினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.
மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிற்றினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே [கயிறு] வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான்…
ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான்.
அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்…

கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை…

மரக்கொம்பை வீட்டுக்கு எடுத்து வந்த மகன் தந்தையிடம் காண்பித்து அரசனின் கேள்வியைக் கேட்டான்…

தந்தை,அந்த மரக்கொம்பைத் தண்ணீரில் போட்டால், அது லேசாக மூழ்கும் பகுதி அடி, மிதக்கும் பகுதி நுனி என்றார். மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.
மீண்டும் அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான். அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.
வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.
அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து போய் தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.
தந்தை அவனிடம், “மேளத்திற்கு தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேன்கூடு ஒன்றைக் கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தைத் தயார் செய்!” என்றார்…

மகனும் தந்தை கூறியவாறே மேளத்தைத் தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான்.
அரசன் மேளத்தைக் கையில் எடுத்து அசைத்தான். அசைவினால் மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் மேளத்திற்குள்ளேயே இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.
இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளைச் செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.
அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. தாங்கள் போட்ட *முதியோர் *சட்டத்தைக் கடைப்பிடிக்க என்னால் இயலவில்லை. என்னுடைய வயதான தந்தை என்னுடனேயே இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தன என்று கூறினான்.
இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது. ஆகவும்
சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.
. உடனே, அவன் – இனி, வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை என்று உத்தரவு போட்டான். அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசி காலத்தைப் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாககழித்தனர்.
*அனுபவ அறிவு* என்பது என்றைக்கும் விலை மதிப்பில்லாதது.
வயதான பெரியவர்கள்
வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த வரம் . நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் நம்மோடு இருப்பதும், அவர்களைப் பராமரிப்பதும்
நமக்கான கடமை மட்டுமல்ல
நமக்கு கிடைத்த வரம் என ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
தொப்புள் கொடியில் இருந்தே பந்தம் கொண்ட தாயும், மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து, கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும்
நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை ! என்றாலும், நாம் நன்றி மறவாதிருப்போம்; பெற்றோரை நன்கு ப் பேணுவோம். பெற்றோரை முறையாக நன்கு பேணுபவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைக்கும்.

Read Previous

திசை மாறிய உறவுகள்..!! உண்மை சம்பவம்..!! கண்டிப்பா அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

கடின உழைப்பின் வலி..!! உழைக்காமல் எது கிடைத்தாலும் அதன் நிலைக்காது என்பதை உணர்த்திய பதிவு…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular