ஓராண்டுக்கு பிறகு வீடு திரும்பும் ஏகாம்பரத்தை வரவேற்க அவன் வீட்டு வாசலிலே எவருமே இல்லை. அவனை பார்க்கும் மனிதர்களெல்லாம் அவனை எள்ளி நகையாடுவது போன்ற எண்ணம் அவனது மனதில் எழவே, சட்டென செருப்பை கழற்றி வாசலில் விட்டு விட்டு வீட்டிற்குள் அவசரமாய் நுழைய முயன்றான் ஏகாம்பரம்..அவனது தாய் செண்பகம் ஓடி வந்து மகனை அரவணைப்பாள் என்று எண்ணிய ஏகாம்பரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.அதற்கு எதிர்மறையாக அம்மாவின் கூக்குரல் காதை கிழித்தது.
”நில்லுடா அங்கேயே! வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்சின்னா நீ கழட்டி போட்ட செருப்பாலயே அடிச்சிடுவேன்” என்று அவனை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் பட்டாசாக வெடித்தாள். செண்பகத்திடமிருந்து
வந்த கடுமையான வார்த்தைகளை கேட்ட மகன் கூசி குறுகி போனான்.
அவனது மனைவி காவியாவின் கண்களில் தெரிந்த தீப்பிழம்பு அவனை பஸ்பமாக்கி விடும் போல் தோன்றவே, ஏகாம்பரம் நிலை தடுமாறி தலை குனிந்தான்.
வீட்டினுள்ளிருந்து ஓடி வந்தான் மகன் விவேக்.தந்தையை கண்ட 15 வயது மகன் முகம் சுழித்து எதுவும் பேசாமல் தூவென எச்சிலை காறி உமிழ்ந்து விட்டு உள்ளே சென்றான்.
ஓராண்டு முன்பு தனது தோளில் சாய்ந்து தூங்கிய அன்பு மகனா இவன்? மனம் துடித்தது ஏகாம்பரத்திற்கு.. இனி இங்கு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என நினைத்து மெல்ல அங்கிருந்து புறப்பட்ட ஏகாம்பரத்தை தடுத்து நிறுத்தியது அவனது அன்பு மகள் நிஷாவின் கைகள்.. “ஏனப்பா? எல்லோரும் உன்னை திட்றாங்களா? உனக்கு நான் இருக்கேன்.. என்னை விட்டுட்டு போயிடாதேப்பா”. .. என தேம்பி தேம்பி அழுத மகளது கைகளை வேகமாக தட்டிவிட்டான் ஏகாம்பரம்.. பின் தன் தலையில் மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டு ஓவென கதறி அழுதான்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி நிஷாவோ தன் தந்தையிடம் “எங்கப்பா போயிருந்த நீ? எல்லாரும் நீ ஜெயிலுக்கு போனதா சொல்றாங்களே?
நீ திருடிட்டீயா?ஸ்கூலில் யாருமே என் கூட பேச மாட்டேங்கறாங்க..நான் எந்த தப்புமே பண்ணலையே” என்று கேட்டழுதபடி மீண்டும் இறுக பிடித்த மகளின் கைகளை உதறி விட்டு பின் நோக்கி நகர்ந்தான் ஏகாம்பரம்.
“நீ எந்த தப்பும் செய்யல. நான் செஞ்ச தப்புதான் உன்னையும் சேர்த்து பழி வாங்குதடா. வேண்டாமடா..இந்த பாவியை தொட்டு விடாதே ..நான் ஒரு அசிங்கமானவன். என்னை விட்டு விலகியே இரு.. இனி உன் அம்மா தானடா உனக்கு எல்லாமே” எனக் கூறிவிட்டு மகளை திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்தான் ஏகாம்பரம்.
“எங்கே போறப்பா நீ ?”என்று கேட்கும் பெண்ணை பார்த்து ..” நான் காட்டில் மிருகங்களுடன் மட்டுமே வாழத் தகுதி உள்ளவன்” என்று சொல்ல வாய் துடிக்க.,பதில் பேசாது நடந்தான்
ஏகாம்பரம் என்றுமே எவருக்கும் தீங்கிழைக்கும் மனிதனில்லை..இருப்பினும்அன்று?
அமைதியாக சென்று கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் ஏனிந்த தடுமாற்றம் ?
“ஐயகோ!நடந்த செயலுக்கு பூமி பிளந்து அதன் உள்ளே தான் புதைந்து விட மாட்டோமா?என ஏங்கியது அவனுள்ளம்.வரு நிமிடம் மதியிழந்து செய்த செயலினால்
பணி புரிந்த இடத்திலிருந்து நிரந்தரமாக நீக்கபட்டான்.உறவுகளால் ஒதுக்க பட்டான். நாளை தன் மகளுக்கு உண்மை புரியும் போது அவளும் தன்னை வெறுத்து விரட்டுவாள்.
இனி அவன் செய்ய வேண்டியது என்ன?
சட்டென முடிவெடுத்த ஏகாம்பரம் அவனது வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணத்தையுமே மனைவி அக்கவுண்டிற்கு மாற்றி விட்டான்.நிம்மதி பெருமூச்சு விட்டான்.
மனைவியிடம் வங்கி விவரத்தை சொல்ல தனது கைப்பேசியிலிருந்து முயற்சிக்க அவனது நம்பர் கூட முடக்கப் பட்டிருந்தது.
ஏகாம்பரத்திற்கு சட்டென நண்பன் மணிமாறன் ஞாபகம் வரவே ,தன் மனைவிக்கு செய்தி சொல்ல அவனே சரியான தீர்வென எண்ணி நடந்தான் நண்பனின் இல்லம் நோக்கி..
இவனை கண்டதும் நண்பனின் மனைவியோ வீட்டிற்குள் பயந்து ஒளிந்தாள்.நண்பனின் பெண் பிள்ளைகள் இவன் கண்களிலிருந்து மறைக்க பட்டனர். மணிமாறன் இவன் வருவதை கண்டதும் அவசரமாய் கதவடைத்தான்
அத்தனை கேவலாமானவனா நான்? என எண்ணி வெயிலில் கிடக்கும் புழு போல ஏகாம்பரம் துடித்தான்.
அவனது வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த ஒரு நிமிடம்.அதுவே இந்த சமுதாயம் அவனை ஒதுக்கி வைத்ததற்கான காரணம்
ஒரு நிமிட சபலம். இதோ ஓராண்டு அனுபவித்த சிறை தண்டனை. எப்படி சொல்வான் அவன் செய்த தவறினை? அந்த ஒரு நிமிடம்….
யாரும் இல்லாத நேரத்தில் மகள் நிஷாவை காண வந்த அவளது தோழியிடம் ஏகாம்பரம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ய,அடுத்த நொடியே , அந்த சிறுமி ஓவென கத்தி ஊரை கூட்டியது. அந்த சிறுமியின் அலறல் சத்தம் ஆம்புலன்ஸ் வண்டியின் சைரன் போல் மீண்டும் மீண்டும் ஒலிக்க மிரண்டு போனான் ஏகாம்பரம்.. திரண்டு வந்தனர் அக்கம் பக்கத்தினர்
அந்த பெண்குழந்தைக்கு அவளை பெற்றவள்
நல்ல தொடுதலையும், கெட்ட தொடுதலையும் சொல்லி வளர்த்தாள் போலும்.. அவள் ஒரு நல்ல தாய்..
எந்த ஒரு தவறினையும் நடக்க விடாமல் செய்ததோடு , அங்கே நடந்ததை வெளியே சொல்லவும் தயங்காது, வெளிப்படையாக பேசி ஏகாம்பரத்திற்கு தண்டனையும் வாங்கி தந்த அந்த சிறுமிக்கு அவளது அன்னை தைரியத்தையே பாலாக தந்திருப்பாள் போலும்.
ஏகாம்பரமும் ஒரு பெண் பிள்ளை பெற்றவன் ஆயிற்றே .. இதே கதி எங்கேனும் தன் பிள்ளைக்கு ஏற்பட்டிருந்தால் நினைத்துப் பார்க்கவே அவன் உடல் நடுங்கியது.
கால் போன போக்கில் பைத்தியகாரனைப் போல் நடந்தான் ஏகாம்பரம்
மனம் கலங்கி நின்றவனின் கண்ணில் பட்டது ஒரு கோவில். அந்த தெய்வம் மட்டும் அவனை மன்னித்து விடுமா என்ன? கோவிலுக்கு சென்றவனுக்கு உள்ளே சென்று அந்த கடவுளை தரிசிக்க மனமில்லை , பாவம் செய்து விட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும் செய்த தவறு சரியாகி விடுமா? செய்த பாவத்திற்கு மருந்தென எண்ணி கோவில் வாசலிலே நிரந்தரமாய் அமர்ந்தான் ஒரு பிச்சைக்காரனாய்..



