பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதங்கள் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தநிலையில், அமைச்சர் கே. என் நேரு இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகத்துறையை மேம்படுத்துவத்திற்காக புதிய அறிவிப்புகள் நிறைய வெளியிட்டுள்ளார். அதாவது, அவர் பேசியபோது கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சி மற்றும் 31 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி செலவு செய்து சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், “இராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகலை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, புதிய பேருந்து நிலையம், புதிய சந்தைகள், நீர்நிலைகள் தூர்வாரல், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அலுவலகங்கள் கட்டுதல், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், கரூர் மற்றும் திருச்சி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சென்னையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இவர் அறிவிப்புகளை தெரியப்படுத்தியுள்ளார்.




