ஒவ்வொரு மரணமும் ஒரு சேதி சொல்லும் ஆனால்.. அது நமக்குத்தான் தெரிவதில்லை.. புரிவதில்லை..!!

Oplus_131072

ஐஸ்பெட்டியில்
அடைபட்டிருக்கிறான் அவன் …!

“இப்படி உதவாக்கரையா இருந்து
எங்கள நித்தம் நித்தம்
சாவடிக்கிறதுக்குப் பதிலா
ஒரேயடியா போய்ட்டாக் கூட
ஒருநாள் அழுது விட்டு
நிம்மதியா இருப்போம்ல ”
என்று கோபத்தில்
வார்த்தைகள் உதிர்த்த அவன் மனைவி , அவன் இப்படி திடீரென தலைசாய்ந்து போனதில் நிலைசாய்ந்துதான் போனாள் .
கதறி அழக்கூட சக்தியின்றி ,
தலையில் கைவைத்து அவனருகே
கல்லாய் அமர்ந்திருக்கிறாள்.

கண்களில் மட்டும்
கண்ணீர் அருவி
நில்லாமல் இறங்குகிறது …!

அவன் ஆன்மா அவள் அருகில் செல்கிறது .
அவளை தன் தோளில் சாய்த்து ,
“விதி என்னை அழைத்தது ,
சென்று விட்டேன்.
உன்னால்தான் சென்றேனென
கண்ணீர் வடிக்காதே ” என்று
அவள் கண்கள் துடைத்து
தன் விரல்களை பார்க்கிறது …
ஒருசொட்டு நீரும் ஒட்டவில்லை ,
அவள் கண்கள் அருவி இன்னும் வற்றவில்லை … !

தள்ளியிருந்த மகனும் மகளும் ,
அழுதழுது கன்னம் வீங்கி
அழகாய்த் தெரிந்தார்கள்.
அவர்களை அழைக்கிறது ,
“அருகில் வாருங்கள் ” என்று.
காதில் விழாதது போல்
அசையாமல் நிற்கிறார்கள்.

ஊரும் உறவும் திரண்டு
ஒவ்வொருவராய் வருகிறார்கள். எல்லோரும் முகங்களில்
ஒரே முகமூடியை
மாட்டி இருந்தார்கள் …

சிரிக்காமல் நடிக்கும்
சோக முகமூடி …!

உதாசீனம் செய்தவன்,
இகழ்ந்து பேசியவன்,
உழைக்காமலே உண்கிறான்
என்று பொறாமை கொண்டவன், இறந்தவனின் நிலை கண்டு உண்மையில்
பரிதாபப் பட்டவன்,
அரையடி நிலத்துக்கு
அவனோடு சண்டையிட்டு
நீதிமன்றம் சென்றவன்
எனப் பலதரப் பட்டவனும்
அவனை பார்க்க வந்து
அழுதுவிட்டுப் போகிறார்கள்.

மூன்று நாட்கள் முன்பு
அவசரத்தேவை என்று
யாருக்கும் தெரியாமல் ,
அவனிடம்
பத்தாயிரம் வாங்கிச் சென்றவனும்
வந்திருந்தான்.

“மூணுநாள் முன்னாலதானே
அவசரத் தேவைன்னு
பத்தாயிரம் வாங்கிப் போன …
இப்படி பொசுக்குனு போய்ட்டியே …
இப்ப யாருகிட்ட கேப்பேன் ”
என வசனம் மாற்றி அழுதான்.

அவன் ஆத்மாவுக்கு வந்த கோபத்தில்
பளார் என அறைந்தது.

அறைந்த ஆத்மாவிற்க்கே கைவலித்தது.
அவனுக்குக் கன்னம்
பழுத்திருக்க வேண்டுமல்லவா …
எதுவுமே நடவாதது போல்
திரும்பிச் செல்கிறான் படுபாவி …!

சிறுவயதில் மலர் கொடுத்து
அன்பைச் சொன்ன போது ,
ஏற்க மறுத்து மலரை கசக்கி
அவன் முகத்திலடித்த பெண்ணும்
வந்திருந்தாள் கணவனோடு.
ஒரு மலர்ச் சரத்தையே
அவன் காலடியில் வைத்து
கை கூப்புகிறாள்…

அவ்வாத்மா ஏற்க மறுத்து
முகம் திருப்பிக் கொள்கிறது,
காலம் கடந்துவிட்டது கண்ணே … !

கஷ்டப்பட்ட காலத்தில்
கைகொடுக்க மறுத்தவன் கூட ,
அவனுக்குத் தோள் கொடுத்து
சுமந்து செல்கிறான்…!

தொழில் தொடங்க வேண்டி
கடன் கேட்ட போது
இல்லை என்று சொன்ன
ஒரு பணக்கார உறவுக்காரன்தான் –
அவனுக்கான குழி தோண்டும் செலவை
ஏற்றிருந்தானாம் –

பெருமையாய் சொல்கிறார்கள் …
சிரிப்புதான் வருகிறது !

வாழ்ந்த போது
ஒன்றுக்கும் உதவாத ஜடமாய்
வாழ்ந்திருந்தாலும்
செத்த பிறகு –
சங்குச் சத்தம்
சைரனாய் ஒலிக்க,
ஒரு மாமன்னனைப் போல் அவன்
பல்லக்கில் பயணிக்கிறான் …

மயானம் நோக்கி …!

குழிக்குள் அவனை இறக்கி
மண்ணிட்டு மூடிவிட்டு ,
கடமை முடிந்ததென்று
கலைகிறது கூட்டம் ….!

அவர்களைப் பார்த்துக்
கத்துகிறது அந்த ஆத்மா …

“அசிங்கம் பிடித்த
அந்த உலகத்திற்கு
திரும்பப் போகாதீர்கள்
இங்கே வாருங்கள் …
இது
ஆசைகளில்லா உலகம் –
தேவைகளில்லா உலகம் –
பொறாமையில்லா உலகம் –
போட்டியில்லா உலகம் –
பஞ்சமில்லா உலகம் –
வஞ்சமில்லா உலகம் –
பட்டினியில்லா உலகம் –
வறுமையில்லா உலகம் …
இங்கே வாருங்கள்
அங்கே போகாதீர்கள் ”
என்ற அதன் கதறலை
காதில் போட்டுக் கொள்ளாமல் ,
ஆட்டு மந்தையாய்
திரும்பி நோக்காது போகின்றனர் …!

என்றாவது ஒருநாள் – அவர்கள்
இங்கே வருவார்கள் என்ற
நம்பிக்கையோடு …
ஒவ்வொருவரையும் வரவேற்க –
காற்றோடு கை கோத்து
காத்திருக்கத்
துவங்குகிறது அந்த ஆத்மா…!!

ஒவ்வொரு மரணமும் ஒரு சேதி சொல்லும் ஆனால் அது நமக்குத்தான் தெரிவதில்லை புரிவதில்லை!!!

 

Read Previous

பலாக்கொட்டைகள் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன..!! அவற்றில் சில முக்கியமானவை..!!

Read Next

ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular