பரிகார மலர்கள்..!! மாரியம்மனுக்குப் பிரியமான தாழம்பூ பண வரவை அதிகமாக்கும் அதிசயம்..!!

 

பரவலாக நீரோடைகளிலும் ஆற்றுப்புறங்களிலும் கவனிப்பாரின்றி புதர்களாக மண்டிக்கிடக்கும் தாவர இனம் – தாழை எனும் தாழம்பூ. நறுமணம் மிகுந்த தாழம்பூ தாவரமானது திருக்கம்பூ என்றும் அழைக்கப்படுகிறது. சில இடங்களில் `கைதை’ என்றும் சொல்கிறார்கள்.

`தாழை’ என்பது ஈரம் மிகுந்த சதுப்புப் பகுதிகளில் குட்டைப் புதராக வளரும் பூவினம். `கைதை’ என்பது மணற்பாங்கான மேடுகளில் மரம் போல சற்று உயரமாக வளர்வது. இதன் பூக்கள் கிளைகள் போன்று நீண்ட மடல்களை உடையது. கைதையின் பழங்கள் மற்றும் விதைகள் உண்ணத்தகுந்தவை.

தாழையில் ஆண் தாழை – பெண் தாழை என்று வேறுபாடும் உண்டு. சில இடங்களில் ஆண் தாழையை `கைதை’ என்கிறார்கள். கூரிய முள்களும் மிகுந்த வாசனையும் உடையது ஆண் தாழைதான். இதன் முள் கையைத் தைப்பதால் இதற்கு கை-தை என்பது காரணப் பெயராயிற்று.

சங்க கால இலக்கியங்களில் – நெய்தல் நிலப் பாடல்களில், தாழையைப் பற்றிய செய்திகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. வண்ணத்தின் அடிப்படையிலும் தாழையை வகைப்பிரிப்பார்கள். அடர் மஞ்சள் நிறத்தில் இருப்பது செந்தாழை. இது ஆடி, ஆவணி மாதங்களில் பூக்கும். சற்று வெளுத்துக் காணப்படுவது வெண் தாழை. இது மாசி, பங்குனி மாதங்களில் பூக்கும்.

பூக்களிலேயே மிக அதிக வாசனை உடையது தாழம்பூதான். தாழம்பூவில் மிகவும் சிறியதான பூ நாகம் மறைந்திருக்கும் என்பார் கள். அதேபோல், தாழைப் புதர்களுக்கு இடையே சர்ப்பங்களும் அடைந்திருக்கும். அதனால் ஆபத்து கருதி இதனை அருகில் சென்று கைகளால் பறிக்க மாட்டார்கள். உண்மையிலேயே பயிரிட முடியாத பூவினம் இது என்று சொல்லலாம்.

மின்னல் மின்னும் காலத்தில்தான் இயற்கையாகத் தாழை பூக்கும் எனும் தகவலும் சொல்லப்படுவது உண்டு. அபாரமான மருத்துவப் பயன்களும் சிறந்த ஆன்மிகப்பயன்களும் உடையது தாழை.

வாதமடக்கி, கபமகற்றி, வியர்வைப் பெருக்கி, இசிவகற்றி எனப் பலவிதங்களில் இந்திய ஆயுர்வேதத்தில் ஆகச் சிறந்த மருந்தாக தாழை பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் கருத்தரிக்கும் பண்பினைத் தூண்டும் மாமருந்து இந்தத் தாழை.

அம்மை நோயால் சருமப் பாதிப்பு மற்றும் ரண வேதனைக்கு உள்ளானவர்கள், தாழம்பூ தைலத்தினால் மாரியம்மனுக்கு தைலக் காப்பிட்டு அபிஷேகம் செய்வது மிகுந்த பலனளிக்கும்.

சிவபெருமானுக்கு உரிய பூஜைகளில் தாழம்பூவினைப் பயன் படுத்துவது கிடையாது. ஈசனின் அடிமுடி தேடிய திருக் கதையில், பிரம்மனுக்கு ஆதரவாகப் பொய் சாட்சி சொன்னதால், சிவகோபத்திற்கு ஆளானது தாழம்பூ. அதனால் சாபம் பெற்றது என்கின்றன புராணங்கள்.

அதன் பிறகு, தனது தவற்றினை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைந்த தாழம்பூவை அவர் மன்னித்தார். வருடத்துக்கு ஒருமுறை மகா சிவராத்திரி அன்று லிங்கோத்பவ காலத்தில் மட்டும் தாழையினை ஏற்றுக்கொள்வதாக அருளினார். இதனையொட்டி திருவண்ணாமலை மற்றும் உத்திரகோசமங்கை போன்ற தலங்களில் லிங்கோத்பவ காலத்தில் தாழம்பூ சார்த்துதல் விசேஷமாகச் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது திருக்கோழம்பம். இந்தத் தலத்தில்தான், பிரம்மதேவன் தான் பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவம் நீங்கப்பெற்றார். அதன்படி, முன்னர் அளித்த சாபத்தை நீக்கி, தமது இடது கையால் தாழம்பூவினை எடுத்து ஜடா மண்டலத்தில் பெருமான் தரித்துக் கொண்ட தலம் இது.

ஆகவே, இந்தத் தலத்தில் மட்டும் மூலவர் அருள்மிகு கோகிலேஸ்வர சுவாமிக்கு வருடம் முழுவதுமே தாழம்பூ சார்த்தி வழிபாடு செய்யலாம் என்பது விசேஷம். இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டால், பொய் சொன்னதால் உண்டான மனவாதனை நீங்கும் என்கிறது, கோயிலின் ஸ்தல வரலாறு.

`சிவ பூஜைக்குத் தகுதியற்ற மலர் ஆவாய்’ என ஈஸ்வர சாபம் பெற்ற தாழை, காட்டாத்தி விருட்சமாக திருச்செங்காட்டங்குடி தலத்தில் அவதரித்தது. சிவ தரிசனத்திற்காக வேண்டி நின்ற அதன் நிழலின் கீழ்தான், பைரவராக உருவெடுத்து வந்த சிவபெருமான் அமர்ந்து இளைப்பாறினார்; சிறுத்தொண்ட நாயனாரின் பெருமையை உலகிற்குக் காட்டினார்.

இன்றளவும் சிவதரிசனம் செய்தபடி ஆலயத்திற்கு உள்ளேயே தழைத்து பரவி நிற்கிறது அந்த விருட்சம். அந்த ஆலயத்திற்கு உரிமை பூண்ட வேளாக்குறிச்சி ஆதீனத்தவர்கள், கம்பி பந்தல் அமைத்து இவ்வாத்தி மரத்தினைப் பராமரிக்கிறார்கள்.

தாழம்பூ தூய்மை மற்றும் பக்தியின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. வசீகரத் தன்மைக்காக, தூய மஞ்சள் – குங்குமத்துடன் இதனைச் சேர்த்துப் பயன்படுத்துவது வழக்கம். இந்தத் தாழம்பூ குங்குமத்தினை நெற்றியில் தரிப்பதன் மூலம், தெய்வ கடாட்சத்தினை ஆகர்ஷணம் செய்ய இயலும். பெண் தெய்வங்களின் அருள் பூரணமாகக் கிடைக்கும். முகத்தில் பொலிவு கூடும்.

பூஜா திரவியங்களில் தாழம்பூவினை அதிகமாகப் பயன்படுத்துவது சிறப்பு. தாழம்பூ பொடியினைச் செஞ்சந்தனம் மற்றும்பல வாசனாதி திரவியங்களுடன் கலந்து அபிஷேகித்தால், அபாரமான நற்பலன்கள் கிடைக்கும். தோல் சம்பந்தமான உஷ்ணக் கோளாறுகள் நிவர்த்தி ஆகும். அம்பிகை சாந்நித்யம் நிலைக்கும்.

தாழை

மடல் துண்டுகளை நல்லெண்ணெய்யில் போட்டுச் சூரிய ஒளியில் வைத்துச் செய்யப்படும் தைலம், மூளை சூட்டினைக் ஆற்றவல்லது. இந்தத் தைலத்தைக் கொண்டு தீபமேற்றி வணங் கினால், குலதெய்வம் வீட்டில் தங்கியிருந்து சகல நன்மைகளையும் அருளும் என்பது ஐதிகம்.

சர்ப்ப தோஷங்கள் உள்ளவர்கள் மாரியம்மனுக்கு தாழம்பூ பாவாடை சார்த்தி வணங்கினால், சர்ப்ப தோஷங்கள் அகலும். தாழை மடல்களால் பின்னப்பட்ட சடையினை அம்பிகைக்கு அலங்காரமாகச் சூட்டுதலும் விசேஷமான பலன்களை அளிக்க வல்லது.

பெருமாளுக்கு மோகினி கிருஷ்ணர் திருக்கோலத்தில் அலங்காரம் செய்து வழிபடும் மரபு உண்டு. இந்த மோகினி கிருஷ்ணருக்குத் தாழை ஜடை பின்னி அலங்கரிப்பது விசேஷம். இதனால், சத் புத்திர பிராப்தி கிடைக்கும்.

பெண் தெய்வங்களுக்கு, தாழை மடல்களைச் சாற்றினாலோ, அர்ச்சித்தாலோ அவர்களது அனுக்கிரஹத்தினை எளிதாகப் பெற முடியும். குறைந்தபட்சம் தாழம்பூ குங்குமத்தினால் அர்ச்சிப்பது விசேஷம். இந்த வழிபாடு பண வரவை ஈர்க்கும். இதனால் வீட்டில் எப்போதும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும்; பண வரவுக்கு குறைவே இருக்காது.

மாரியம்மன், மகாலட்சுமி போன்ற தெய்வங்களுக்கு தாழை சாற்றுதல் மிகவும் விசேஷம். இன்றைக்கும் சில இடங்களில் வரலட்சுமி பூஜையன்று தாழைமடல் சாற்றுதல் கட்டாயமாகப் பின்பற்றப்படுகிறது.

ஆடி மாதத்து நாக சதுர்த்தி அன்றும், ஆவணி மாதத்து விநாயகர் சதுர்த்தி அன்றும் தாழை மடலால் பூஜிப்பது விசேஷம். இதனால் ராகு – கேது ஆகிய சாயா கிரகங்களின் தீய பலன்கள் குறையும்; நாக தோஷம் படிப்படியாக அகலும்.

விநாயகருக்குரிய ஏக விம்சதி பூஜைக்கு உரிய மலர்களில் தாழையும் ஒன்று. ‘ஓம் காமிதார்த்தப்ரத கணபதி’ என்கிற திருநாமத்தினைச் சொல்லி ‘கேதகி புஷ்பம் ஸமர்ப்பயாமி’ என்று சமர்ப்பிப்பது முறை. இதனால் அடிக்கடி கர்ப்பம் நழுவுதலால் துன்பப்படும் பெண்களுக்கு, அந்தப் பாதிப்பு நீங்கி, சத்புத்திரப் பிராப்தி கிடைக்கும் என்கின்றன .

Read Previous

அளவோ சிறுசு.. பலனோ பெருசு.. உடல் சூட்டை சட்டுனு கூலாக்க இந்த ஒரு பொருள் போதும்..!!

Read Next

விழுதி இலை பொடியால் நுரையீரல் பலம் பெறும் வழி – தினசரி நடைமுறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular