என் மகன் அடிக்கடி வீட்டுக்குள்ளே பந்துஅடித்து விளையாடுவான். நான் திட்டினால் “இல்லப்பா எந்த கண்ணாடியிலும் படாமல் பார்த்துக்கொள்கிறேன்” என்பான்…….
அன்று வழக்கம்போல் பந்தை அடித்து விளையாடிக்கொண்டிருந்தான். நான் குளித்துக்கொண்டிருத்தேன்………
திடீரென்று “டம்” மென்று ஒரு சத்தம். சிறிதுநேரம் கழித்து என் மனைவி சத்தம்போட ஆரம்பித்தார் “போச்சா டிவி ஷோகேஸ் கண்ணாடியை உடைச்சிட்டியா…….?
உனக்கு எத்தனைதடவை சொல்றது அறிவில்லையா? என்று சொல்லி ஒரு அடியும் அடித்துவிட்டார். திட்டுவதில் அவன் அம்மாச்சியும் சேர்ந்து கொண்டார்கள்………..
” இரு இப்ப அப்பா குளிச்சிட்டு வந்தவுடனே உனக்கு இருக்கு கச்சேரி” என்று என்மனைவி சொல்வதும், பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த எனக்கு தெளிவாக கேட்டது. வெளியில் வந்தேன். வந்தவுடனேயே என் மனைவி “பார்த்தீங்களா? இவன் என்ன வேலை செஞ்சு வச்சிருக்கான்னு என்றார்……..
அவன் கண்ணாடியை உடைத்தவுடன் இருந்த அந்த கோபம் பத்து நிமிடம் கழித்து வெளியில் வந்ததும் எனக்கு குறைந்ததுபோல் இருந்தது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தேன். இவனை அடிப்பதனால் உடைந்த ஷோகேஸ் திரும்பி வரப்போவதில்லை…….
அவனை கூப்பிட்டு உற்காரவைத்தேன். “நான் உன்னிடம் எத்தனைமுறை சொல்லியிருப்பேன்! இப்ப என்ன ஆச்சு பார்த்தாயா? நாம உடனடியா இதை வாங்கமுடியுமா? நமக்குத்தானே நஷ்டம் இப்பத்தானே உனக்கு ஸ்கூல் ஃபீஸ், ஆட்டோ ஃபீஸ் எல்லாம் கட்டினேன் என்றேன்………
அவன் கண்களில் பொல பொல வென கண்ணீர். அந்த கண்ணீரில் அவன் தன் தவறை உணர்ந்தது தெரிந்தது….. சிறிதுநேரம் அமைதியாக விட்டுவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து அவனே ” அப்பா இனிமேல் இதுபோல செய்யமாட்டேன் என்றான்……..
அவனிடம் அமைதியாக சொன்னேன் “பரவாயில்லை விடு. இனி அப்பா, அம்மா என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளவேண்டும். நாங்கள் எதையுமே உன் நன்மைக்குத்தானே சொல்வோம் என்றேன். சரி என்று தலையசைத்தான்………
இது ஒரு சாதாரண சம்பவம்தான். ஆனால் இதில் எனக்கு இரண்டு விஷயங்கள் புரிந்தது. ஒன்று ” கோபம் வரும்போது ஒரு பத்து நிமிடம் தள்ளிப்போட்டால் கோபத்தை வெகுவாக குறைக்கலாம்” என்பது. இன்னொன்று “பிள்ளைகளை அடித்து புரிய வைப்பதைவிட உட்காரவைத்து அன்பாக பேசி புரியவைக்கும்போது அவர்கள் மனதில் அது இன்னும் ஆழமாக பதியும் என்பது.




