Oplus_131072
வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள். பொதுவாக, ராகு காலம் என்பது சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டிய நேரமாகக் கருதப்பட்டாலும், துர்க்கை அம்மனுக்கு ராகு கால நேரத்தில் செய்யப்படும் பூஜை மிகுந்த பலன்களைத் தரக்கூடியது.
வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையின் (காலை 10:30 மணி முதல் 12:00 மணி
வரை) முக்கிய பயன்கள் இதோ:
1. திருமணத் தடைகள் நீங்குதல்:
திருமண வயதில் இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிப்போகும் பெண்களுக்கு, வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை ஒரு சிறந்த தீர்வாகும். ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி வழிபடுவதால் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்
2. மாங்கல்ய பலம் மற்றும் குடும்ப ஒற்றுமை:
திருமணமான பெண்கள் இந்தப் பூஜையைச் செய்வதன் மூலம் தங்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
3. கடன் தொல்லை மற்றும் பண கஷ்டம் தீருதல்:
மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமையில் துர்க்கையை வழிபடுவது செல்வச் சேர்க்கையை உண்டாக்கும். தீராத கடன் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், தொடர்ந்து 9 அல்லது 11 வெள்ளிக்கிழமைகள் ராகு கால பூஜை செய்து வர, பொருளாதார நிலை உயரும்.
4. தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு:
ராகு கால பூஜை எதிர்மறை ஆற்றல்களை (Negative energy) நீக்கும் வல்லமை கொண்டது. கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை மற்றும் தேவையற்ற பயம் நீங்கி தைரியம் பிறக்கும்.
5. குழந்தை வரம்:
நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், ராகு கால நேரத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் கிட்டும்.
பூஜை செய்யும் முறை , குறிப்புகள்,
நேரம்:
வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி முதல் 12:00 மணிக்குள்.
விளக்கு:
எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி, சாறு பிழிந்துவிட்டு, பின் பகுதியை உட்புறமாகத் தள்ளி (திருப்பி), அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
விளக்கு எண்ணிக்கை:
பொதுவாக 2 விளக்குகள் ஏற்றுவது மரபு.
மலர்:
செவ்வரளி அல்லது மல்லிகைப் பூ சூட்டி வழிபடுவது சிறப்பு.
இந்த பூஜையை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலிலோ அல்லது வீட்டிலோ துர்க்கை அம்மனை மனதார நினைத்து வீட்டிலோ செய்யலாம். நீங்கள் மனதில் வேண்டிய காரியம் கட்டாயம் நிறைவேறும் . அதை விட உங்களுக்கு மன அமைதியை உண்டாக்கும். இந்த வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையை நீங்கள் ஆரம்பித்தால் அதை விடவே மனது வராது ஏனெனில் அந்த அளவுக்கு இந்த பூஜை மனதில் அமைதியை உண்டாக்கும். நான் கடந்த மூன்று வருடங்களாய் வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து இரண்டு விளக்குகள் ஏற்றி பூஜை செய்து வருகிறேன். மற்ற நாட்களில் பூஜை செய்வதைக் காட்டிலும் இந்த வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்திடும் பூஜை பெரிய மன அமைதியை தரும். நான் ஒரு 5 வாரங்கள் அல்லது 9 வாரங்கள் மட்டும் செய்யலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் இந்த வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை செய்யாமல் என்னால் இருக்கவே முடியாது. இரண்டு வருடங்கள் காலையில் சாப்பிடாமல் பூஜை செய்து பிறகு சாப்பிடுவேன். கடந்த ஒரு வருடக் காலமாய் காலை உணவை சாப்பிட்டுத் தான் செய்கிறேன்.நீங்கள் சாப்பிடாமல் செய்தாலும் சாப்பிட்டு விட்டு செய்தாலும் பலன் ஒன்று தான். வேண்டிய வரங்கள் கிட்டும்.
விளக்கேற்றியப் பின்னர் பூஜை செய்யும் போது துர்க்கை அம்மனை நினைத்து போற்றிகள் கூறி பூஜை செய்ய வேண்டும். உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து வழிப்பட்டால் இன்னும் விசேஷம்.




