நண்பா… நான்…. நான் நரகாசுரன்
நர…கா…சுரனா…!?!
உன்னைத்தான் அந்த யுகத்திலேயே அழித்தாயிற்றே…!!! எங்கிருக்கிறாய், காணோமே…!!!
உள்ளே…உள்ளே…
உனக்குள்ளே இருக்கிறேன் நண்பா…!!!
எனக்குள்ளேயா… ஐயோ….!!!
எத்தனை நாளாய்…..???
அப்படியானால் சத்தியபாமாவின் மாமா அழித்தது யாரை……???
உனக்குள் மட்டுமில்லை, உலகத்து மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறேன்.
பிறந்த குழந்தைகளை பீடிப்பதில்லை நான்.
குழந்தைப் பருவம் முடியும் பருவத்தில் குடிபுகுவேன் நான்.
ஐயய்யோ… நீ அழியவில்லையா…???
சத்தியபாமாவின் மாமா
என் உடலை அழித்தார்,
உருவத்தை அழித்தார்.
அவரது கடைசிப் பானத்துக்குத் தப்பி ஓடிய உருவமில்லா நான்,
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கொண்டேன்.
சிவனே… இது என்ன கொடுமை…???
சிவன் இருக்கட்டும், இன்னும் கேள்.
யுகம் யுகமாய் என்னை சோறிட்டு வளர்த்து காத்து வருவது மனிதர்களே…!!!
மனிதர்கள் நாங்கள் உன்னைக் காக்கிறோமா…..!!!???!!!
ஆம்.
குட்டியாய் இருந்த எனக்கு குடிக்க நீரும்,
தின்ன சோறும் இட்டு வளர்ப்பதே நீங்கள்தான்.
நீ இழைக்கும் ஒவ்வொரு தவறும் என் தீனி.
பொய்கள், என் போர்ன்விட்டா.
தவறுகள், தாளிமீல்ஸ், தலப்பாகட்டி பிரியாணி.
குரோதம் வரும்போது எனக்கு குருதி பெருகும்.
பொய் என் சிற்றுண்டி,
பொறாமை என் பண்டிகை.
கடவுள் உன்னைப் படைத்தபோது கள்ளம் கபடமில்லா தெய்வத் தன்மை வைத்துப் படைத்து மனிதனாக வாழச் சொன்னார்.
உன்னை கடவுள் பக்கம் போகாமல் பார்த்துக் கொள்வதே என் வேலை.
உன்னுள்ளே கள்ளம், கபடம், காமம், குரோதம், தீமை வளர்த்து மிருகத்தின் பக்கம் அனுப்பவதே என் வேலை.
உள்ளே நரகாசுரனை வைத்துக் கொண்டு வெளியே அழித்துவிட்டதாய்
ஆட்டம் போடுகிறாய் மனிதா…..!!!
உன்னை எப்படி அழிப்பது….???
என்னை எப்படி அழிப்பதென்று என்னிடமே கேட்பவனே… கேள்….!!!
அடுத்தவர் வெற்றியை ஒருவன்
அகமகிழ்ந்து கொண்டாடும் போது
என் சாவுக்கு நாள் குறிக்கப் படுகிறது.
மனிதனுக்குள் அன்பு வரும் போது அகால மரணம் வருகிறது எனக்கு.
ஒவ்வொரு முறை தியானிக்கும் போதும்,/திணறல் எடுக்கும் எனக்கு.
அடுத்தவர் வாழட்டும் என்ற எண்ணம் வரும்போது நான் அழிந்து போகிறேன்.
உன் உள்ளே அமைதி வரும் போது என் கல்லரை கட்டப் படுகிறது.
வெளியே விளக்கேற்றி
வெற்றி வெற்றி என்று கொண்டாடுபவனே,
உள்ளிருக்கும் நரகாசுரனை அழித்தால்தான்,
உன்மையான தீபாவளி
ஒரே நாளில் என்னை அழிக்கும் சக்தி உனக்கில்லை.
ஓராண்டில் என் கதை முடி.
உள்ளே விளக்கேற்று…..!!!
அடுத்தவர் வாழட்டும் என்ற எண்ணம் வரட்டும்,
அக இருள் நீங்கட்டும்,
உள்ளே ஒளி வரட்டும்.
உண்மையான தீபாவளி வரட்டும்
ஒவ்வொரு நாளும்.




