புண்ணிய கணக்கு இதுதான்…
மதுரை ரயில்நிலையத்தை விட்டு சுமைகளுடன் வெளியே வந்தேன். வீட்டுக்கு போக ஆட்டோ பேசினேன்
ஆட்டோக்காரரிடம்
‘எவ்வளவு..? என்று கேட்டேன் …
”600-ரூபாய்” என்றார்…
”400-ரூபாய்க்கு வருமா ???என்றேன்,..
சற்று யோசித்த அவர்
‘சரி 450-ரூபாய் கொடுங்க… வண்டி ஏறுங்க சார்” என்றார்.
ஆட்டோ பறந்தது…
”ஏம்பா இந்த வழியா சவாரி போனா நீங்க டிபன் எங்கே சாப்பிடுவீங்க…? என்றேன்…
ரோட்டுக்கடை தான் சார் என்றார்
”அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்க, . இருவரும்
டிபன் சாப்பிட்டு விட்டு போவோம்” என்றேன்…
இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிக்கிட்ட ஆட்டோ நின்றது…
ஒரு நடுத்தரவயது அம்மா…
அவர்கள் கணவர் துணையற்றவர் என சொல்லியது தோற்றம்…
”வாங்க சார்” என்றார்
“இங்கதான் சார்… வயித்துக்கு ஒன்னும் பண்ணாது” என்றார் ஆட்டோ டிரைவர்…
இட்லி, வடை, பொங்கல், பூரி என கட்டினோம்…
”எவ்ளோம்மா?” என்றேன்.
”60-ரூபாய் சார்” என்றார்
100-ரூபாய் கொடுத்தேன்…
மீதியை.., சில்லரையாக பொறுக்கியது அந்த அம்மா…
”இன்னக்கி வியாபாரம் டல் சார்” அதன் சில்லரை கஷ்டம் என்றார்…
”சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்… அப்போ வாங்கிக்கிறேன்”
என்று கூறி புறப்பட்டோம்…
”சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க… நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு,40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?” என்றார் ஆட்டோக்காரர்
”அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும். அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்… இல்லையா….?
“எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் அண்ணா” என்றேன்.
“சங்கம் அமைப்பது, வசூல்செய்வது, அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது… உண்டியல் போடுவது என இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை… நடைமுறை வாழ்க்கையிலே இப்படியும் தேடலாம்” என்றேன்..
ஆட்டோ வீடு வந்து சேர்ந்தது…
”இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட 450-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்..
“400-ரூபாய் போதும்” சார் என்றார்….!
”என்னாச்சு அண்ணா?” என்றேன்…
”அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும் புண்ணியம் கிடைக்குமே சார்” என்றார் …!
ஒருகணம் மூச்சு நின்றது.
நான் போடும் புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு…!




