ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம்.. ஒன்று இருந்தது..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

Oplus_131072

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம்..
ஒன்று இருந்தது.

பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி.

அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும். எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும். நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும்.தோசை சுடுவதற்கு தோசைக்கல் பக்கத்து வீட்டுல வாங்கி #தோசை சுட்டதும் உண்டு..
பக்கத்து வீட்ல கொப்பரை வாங்கி வந்து இட்லி அவிச்சதும் உண்டு.

வீட்ல #அம்மி இல்லையென்றாலும் பக்கத்து வீட்டுல போய் மசாலா அரைத்து குழம்பு வைத்ததும் உண்டு…

மழை பெய்யும் போது அவசரமாக வெளியே போக வேண்டும் என்றால் பக்கத்து வீட்டில் குடையை வாங்கிக்கொண்டு வெளியே போயிட்டு வந்து திரும்ப கொடுத்ததும் உண்டு.

பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும். #மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு. நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை.

மகளை பொண்ணு பார்க்க வரும்போது வெறும் கழுத்த இருக்க கூடாது என்ற பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி நகை போட்டதும் உண்டு.

பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு.
அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு. பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் மக்கள் கடைப்பிடித்த உபதேசிக்காமல் அன்று நெறிமுறையாக இருந்தது…

வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். அக்காவின் #தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு. வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி படிப்பார்கள். வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை. வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை. அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் தகராறு. அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். அழுகி எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள். பற்றாக்குறை இல்லாத நிலை வீடுகளில் இன்று இருக்கிறது. பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை….

அந்தக் காலம் வசந்தமான காலம் தான்…

Read Previous

தெரு நாய்களை கருணை கொலை செய்ய அரசு அனுமதி..!! வெளியான தகவல்..!!

Read Next

ஆடிப்பூரம்..!! வளையல்..!! அருமையான மலரும் நினைவுகளை நினைவு படுத்திய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular