‘இது ஓர் அபூர்வ புடவை’.. சிறு கதை..!! இது தீபாவளி பரிசு.. அருமையான கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

தினம் ஒரு குட்டிக்கதை –

‘இது ஓர் அபூர்வ புடவை’. (சிறு கதை)

(இது தீபாவளி பரிசு)

 

சூறாவளி போல் சுழன்று சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்த அபர்ணாவின் காதுகளில் அலை போல் வந்து மோதியது குடும்பத்தினரின் அரட்டை சத்தம்….

 

தன்னை பற்றி தான் புறம் பேசுகிறார்கள் என்று தெரிந்தும் தழும்பாத நீர் குடம் போல் எகிறாது அமைதி காத்தாள் அபர்ணா…

அவர்களது பேச்சும் கிண்டலும் … உலக்கை கொண்டு அவளை இடிப்பது போல இருந்தாலும் , அதன் வலியை மறந்து இன்முகம் காட்டி, வீட்டை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள் அபர்ணா…

 

தீபத் திருநாள்(தீபாவளி) ஆயிற்றே … நான்கு நாத்தனார்கள், இரண்டு கொழுந்தனார்கள் என கொழுந்து விட்டு எரியும் விளக்கு போல வீடே பிரகாசமாய் இருந்தது …

 

வேலை களைப்பில் அபர்ணாவின் கண்கள் மயங்க, அவளது கணவன் பூமிநாதன் ஓடி வந்து அவளை தாங்கி பிடித்தான்…

 

“ஏம்மா அப்பு! ஏன் இப்படி தனியா நின்னு கஷ்டப்படுற? உள்ளே உட்கார்ந்து கதை பேசுறாங்களே… அவங்கள யாரையாவது கூப்பிட்டு உதவி செய்ய சொல்ல வேண்டியது தானே”… என்று கோபமாய் கத்தியபடி, மனைவி செய்த தீபாவளி பலகாரங்களை சுவைத்துக் கொண்டிருந்த தங்கைகளையும், தம்பி மனைவிகளையும் கூப்பிட விரைந்து சென்ற கணவன் பூமிநாதனை தடுத்து நிறுத்தினாள் அபர்ணா…

 

“ஏங்க!வேண்டாங்க! உங்க அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி எல்லாரும் ஒன்னு கூடி சந்தோஷமா இருக்காங்க… அவங்கள இன்னைக்கு நீங்க எதுவும் சொல்லக்கூடாது” …

 

“அந்த சந்தோஷத்தை கலைக்கிற பாவம் குருவிக்கூட்டை கலைக்கிற மாதிரி… விடுங்க! நான் பாத்துக்குவேன் ..

இதோ ! இப்ப வேலைக்காரி ராஜம் வந்துடுவா”.. என்று அவனது வாயடைத்தாள் அபர்ணா..

 

மனைவியின் களைப்பை கவனித்த பூமிநாதனின் கண்களில் கண்ணீர் முட்டியது… அவனே அவளுக்கு உதவி செய்ய முடிவு செய்தான்..

 

அடுப்படியில் மகன் பூமிநாதனின் குரல் கேட்கவே, தாயார் பருவதத்தம்மாள் “என்னடா பூமி! எப்ப பார்த்தாலும் பொண்டாட்டி முந்தானையை புடிச்சுக்கிட்டே அலையறியே… உன் அக்கா தங்கச்சி கூட உட்கார்ந்து பேச கூடாதா? ” என்று அதட்ட அவனுக்கு கோபம் தலைக்கேறியது…

 

“என்னன்னா? அண்ணி இந்த தடவையும் அவங்க வேலையை காமிச்சுட்டாங்க போல… இதை பாருங்க.. தங்கச்சி சரசுக்கு வாங்கின புடவையை விட என் புடவை 200 ரூபாய் கொறச்ச… அவதான் அண்ணிக்கு புடிச்ச நாத்தனார் ஆச்சே.” என்று ஆர்ப்பரித்தாள் ஒரு தங்கை.

 

அதுவரை பொறுமை காத்திருந்த பூமிநாதன் “வாய மூடுங்க… உங்களுக்கெல்லாம் நல்ல புடவையா எடுத்துக் கொடுத்துட்டு அவ சாதாரண காட்டன் புடவை எடுத்துக்கிட்டால… ஆளுக்காளு இப்படித்தான் பேசுவீங்க”…. என எகிறினான் ..

 

“டேய் பூமி ! நீ வாய மூடுடா ! உன் வீட்டுக்கு வந்திருக்கும் கூட பொறந்தவங்களை இப்படியா திட்டுவ? அதுங்க அழுதா அந்த பாவம் நம்மளை தானடா சேரும்” என ஒரு புதுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டாள் அவனது தாய் பர்வதத்தம்மாள் …

 

அவசரமாய் தன் அறைக்கு சென்று திரும்பிய பூமிநாதன் அவர்களுக்கு முன் ஒரு எளிமையான கைத்தறி புடவையை தூக்கி போட்டான் “இத பாருங்க … இதுதான் அபர்ணாவின் புடவை. உங்க புடவைகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். இந்த தீபாவளிக்கும் எப்பொழுதும் போல் விலை மலிவான புடவை தான் எடுத்து கிட்டா” என்றான்…

 

சட்டென்று பூமிநாதனின் அக்கா மகளான வனிதா பாய்ந்து வந்து அந்த புடவையை எடுத்து விரித்து தன்மேல் வைத்து பார்த்தாள் …

 

“மாமா! இந்த புடவை சூப்பரா இருக்கு… நான் தான் புடவை கட்டுறேனு உங்களுக்கு தெரியாதா ? உங்க பிள்ளைகளுக்கு மட்டும் எடுத்தீங்க.. எனக்கு? இதை நான் எடுத்துக்க போறேன் .”.. என்று சற்றும் யோசிக்காமல் அந்த புடவையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு, அதை கட்டி பார்க்க வேறு அறைக்குள் சென்றாள்..

 

“உனக்கு இல்லாததா?.. நீயே வச்சுக்கோடி ராசாத்தி! நீ கேட்டா உங்க அத்தை என்ன கொடுக்க மாட்டேன் என்றா சொல்லிடுவா” சிரித்துக் கொண்டே பேத்தியிடம் சொன்னாள் அம்மா பருவதத்தம்மாள்…

 

“ஆமாம்… உனக்கு பிடிச்சிருந்தா நீயே அதை வச்சுக்கோ” என அங்கே அக்கா தங்கை குரல்கள் எழும்ப, அவன் சற்றும் எதிர்பார்க்காத இந்த திருப்பமோ ‘ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே!’ என்ற பழமொழி போல இருந்தது பூமிக்கு..

 

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் ஆனதை எண்ணி செய்வதறியாது முழித்து நின்றான் பூமிநாதன்…

 

மனைவியின் புடவை பறிபோயிற்றே !என்று மனம் கலங்கி யோசித்துக் கொண்டே அக்கா மகளை பின்தொடர்ந்த பூமிநாதன் …. அவளிடம் கெஞ்சிய படி

“அந்த புடவை நான் அத்தைக்கு வாங்கிட்டு வந்தது.. அதை கொடுத்திடும்மா.. மாமா உனக்கு வேற வாங்கி தரேன்” .. என்று அன்பாய் கேட்டான் ..

 

“போங்க மாமா! அது எனக்கு தான்”…என்று கூறி சட்டென அதைப் பெட்டிக்குள் போட்டு மூடினாள் அந்த மருமகள் ….

 

அவசரமாய் அடுப்படிக்கு வந்த பூமிநாதனோ மனைவியின் முகத்தை ஏறெடுத்து பார்க்க வெட்கப்பட்டு நிற்க … ஆனால் அவளோ எந்தவித சலனமும் இல்லாமல் “பரவாயில்லைங்க… விடுங்க! சின்ன பொண்ணு. ஆசை படுறா.. அவளும் நம்ம பொண்ணு மாதிரி தானே … உரிமை இருக்கிற இடத்தில தானே கேட்க சொல்லும்.”. என்று சொல்ல ஆச்சரியத்துடன் அவளை நோக்கினான் பூமிநாதன் …

 

ஆர்ப்பரிக்கும் பட்டாசு சத்தத்தின் நடுவே கணவன் பூமிநாதன் மெல்ல அபர்ணாவின் கையை அழுத்தியபடி, “பூசை முடிந்ததும் உடனே கிளம்பு! கடைக்கு போகணும்… நீ இங்கே பரிமாறிக் கொண்டு நிற்க வேண்டாம். மறுத்து பேசினால் ,என்னை மதிக்கவில்லை என்று அர்த்தம்” என்றான்.

 

அவன் சொன்னது போல கிளம்பினாள் அபர்ணா… பைக்கில் ஏறப்போன மருமகளை தடுத்த மாமியார் பருவதத்தம்மாள் “ஏன்டி மா ! உன்கிட்ட புடவையா இல்ல… இவ்வளவு அவசரமாக கிளம்பனுமா? இங்க வேலை அவ்வளவு இருக்கு … யாரு எல்லோருக்கும் சோறு போடுவாங்க ? ஏன் இந்த அலமாரியில ஒரு புது புடவை இருக்குல்ல.. அதை எடுத்து கட்டிக்க வேண்டியது தானே?”.. கோபமாய் அதட்டினாள் மாமியார்..

 

அது அவனுக்கு தெரியும் வேலைக்கார ராஜத்திற்காக வாங்கி வைத்த புடவையென்று.

 

அம்மாவின் பேச்சை சிறிதும் காதில் வாங்காத பூமிநாதன் மனைவியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று பைக்கில் ஏற,

 

பூமிநாதனின் பைக் எந்த துணிக்கடைகளிலும் நிற்காமல் பறந்து கொண்டிருந்தது… முடிவில் அது நின்ற இடமோ மனைவி அபர்ணாவின் அம்மா வீடு…

 

கண்களில் கண்ணீர் அடைமழையாய் ஊற்ற கணவனின் கால்களில் விழப்போன மனைவியை இறுகத் தழுவினான் பூமிநாதன்.. பின்னர் அவளை பார்த்து

“ஏய்! உன் கவலை புடவை பற்றியது இல்லை என்பது எனக்கு தெரியும்…

கல்யாணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் சந்தோஷத்தை தேடி தாய் வீடு வரும் என்னுடைய அக்கா தங்கையின் மனநிலை தானே உனக்கும் இருக்கும்… உன் அண்ணன் தம்பி உன் அக்கா தங்கையுடன் நீ சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரம் இது…

 

உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் இடையே வேண்டுமானால் மனக்கசப்பு இருக்கலாம்… அது உனக்கும் எனக்கும் இல்லையே… வா !உள்ளே போகலாம்” என அவள் கையைப் பிடித்து மாமியார் வீட்டிற்குள் நுழைந்தான் பூமிநாதன் .

 

மாமனார் வீட்டினுள் நுழைந்த பூமிநாதனையும் அபர்ணாவையும் கண்ட அவளது அண்ணன் குடும்பம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர்… நான்கு வருடங்களுக்குப் பிறகு தாய் வீட்டில் காலடி வைத்த மகளைப் பார்த்த தகப்பனோ கண் கலங்கியபடி ” மகளே! இதுவே உன் பிறந்த வீட்டில் நீங்கள் கொண்டாடும் முதல் தீபாவளி. வருடங்கள் ஓடிப் போனாலும் இது உங்களது தலை தீபாவளி ” என்றே கூறி தாய் வீட்டு சீதனமாய் பட்டுப்புடவையும், பட்டு வேட்டியும் தர மகிழ்ச்சியாய் தீபாவளியை மனைவியுடன் கொண்டாடி வீடு திரும்பினான் பூமிநாதன்

 

பூமிநாதனின் வீடு….

 

“பாத்தீங்களா ! பாட்டி! என்கிட்ட நூல் புடவையை கொடுத்துட்டு .. மாமா அத்தைக்கு கடை கடையாய் ஏறி நல்ல பட்டுப்புடவை ஒன்று வாங்கி கொடுத்திருக்காரு… நான் புடவையை எடுத்துக்கிட்டதால் , அடிச்சது பாருங்க, இந்த அத்தைக்கு பட்டு புடவை… எவ்வளவு அழகான புடவை” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தாள் பேத்தி வனிதா.

 

“அதுதான் அவளோட முகத்திலேயே தெரியுதே… தேடி தேடி பொண்டாட்டிக்கு ஒரு அபூர்வமாய் புடவை வாங்கி தந்துருக்கான்ல.. அந்த மகிழ்ச்சியிலே” என்றாள் மாமியார் பருவதத்தம்மாள் …

 

அபர்ணாவுக்கு தானே தெரியும் .. தாய் வீட்டு சீதனமாய் வந்த அந்தப் புடவை எத்தனை கடை ஏறி இறங்கினாலும் கிடைக்காத அபூர்வ புடவை என்று…!

Read Previous

12,480 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்..!!

Read Next

தூக்கி எறியும் எலுமிச்சைப்பழம் தோலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular