Oplus_16908288
அவர் ஒரு தொழிலதிபர். அவர் வியாபாரத்தில் பெரும் நெருக்கடி, விற்ற பொருட்களுக்கு பணம் வரவில்லை. கடன்கள் கழுத்தை நெரித்தன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ‘அவ்வளவுதான்.. பிசினஸே காலி’ என்று கலங்கிப் போனார்.
செய்வதறியாத சூழலில் ஒரு பூங்காவில் அமர்ந்து சோகமே உருவாக யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பெரியவர் வந்தார். தொழிலதிபரின் கஷ்டங்களைக் கேட்டவர், ‘பணம்தானே உன் பிரச்னை? இந்தா, ஒரே செக்கில் அதைத் தீர்த்து வைக்கிறேன்’ எனத் தன் பையில் இருந்து ஒரு செக் புக்கை எடுத்தார். அதில் பல கோடி ரூபாய்க்கு நிகரான ஒரு தொகையை நிரப்பி, கையெழுத்திட்டுக் கொடுத்தார். சரியாக ஒரு வருடத்தில் உன் பிரச்னைகளை எல்லாம் சரி செய்துவிட்டு இதே இடத்துக்கு வா. அப்போது இந்தத் தொகையை எனக்குத் திருப்பிக் கொடுத்தால் போதும்” என்று சொல்லிச் சென்றுவிட்டார் அந்தப் பெரியவர்.
தொழிலதிபர் காசோலையைப் பார்த்து அதிர்ந்தார். காரணம், அதில் ராக் ஃபெல்லர் என்று கையெழுத்திடப் பட்டிருந்தது. அந்த நாட்டிலேயே மிகப் பெரும் பணக்காரரின் பெயர் அது. யானை பலம் வந்தது போலிருந்தது அவருக்கு.
அந்த செக்கை அவர் உடனடியாக வங்கியில் போடவில்லை. ‘முடிந்தவரை நம் முயற்சியாலேயே பிரச்னைகளை சரி செய்து பார்ப்போம். துணிந்து சில ரிஸ்க் கான முடிவுகளை எடுப்போம். அது தப்பாய்ப் போனால் இருக்கவே இருக்கிறது ராக்ஃபெல்லரின் காசோலை. இது நம்மைக் காப்பாற்றும்’ என நம்பிக்கை கொண்டார். அந்த தைரியத்தில், தொழிலை சீர்படுத்த தடாலடி மாற்றங்களில் இறங்கினார்.
உடனடியாக, தனது பணியாளர்களில் பிரச்னைக்குரியவர்களை மாற்றினார். பணம் தராத வியாபாரிகளிடம் உருட்டி மிரட்டி வசூலித்தார். அதை வைத்து உற்பத்தியைப் பெருக்கி கடன் காரர்களுக்கு கொஞ்ம் கொஞ்சமாக பணத்தை செட்டில் செய்தார். ஆறு மாதத்தில் தனது கடன்கள் அனைத்திலிருந்தும் முழுமையாக விடுபட்டார் அந்தத் தொழிலதிபர். அதன் பிறகு வருமானம் கொட்டியது. ராக்ஃபெல்லரின் காசோலையை மாற்றி பணமாக்க வேண்டிய தேவையே அவருக்கு ஏற்படவில்லை.
ஒரு வருடம் கழித்து அதேநாள், அதே பூங்காவுக்குச் சென்றார் தொழிலதிபர். பெரியவர் கோலத்தில் வந்த ராக்ஃபெல்லரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்தப் பெரியவரும் வந்தார். ஆனால், பின்னாலேயே ஒரு நர்ஸ் வந்து அவரைப் பிடித்துக்கொண்டார். “ஏன் இவரைப் பிடிக்கிறீர்கள்?” என்று தொழிலதிபர் கேட்டார்.
“அட, இவர் ஒரு மனநோயாளிங்க. அடிக்கடி தப்பிச்சு வந்துடுறார். ரோட்டுல கண்டெடுத்த ஒரு செக் புக்கை வச்சிக்கிட்டு, யாரைப் பார்த்தாலும் ‘நான்தான் ராக் ஃபெல்லர்’னு சொல்லி செக் எழுதிக் கொடுக்குறார். ஒரே தொல்லை!” என்றார் அந்த நர்ஸ்.
தொழிலதிபர் மலைத்துப் போனார். ‘ஒட்டுமொத்த பிரச்னைகளிலிருந்தும் நம்மை மீட்டது பணமே தராத இந்த போலி காசோலையா?” என்று வியந்து போனார்.
உண்மையில் அவருக்கு அன்று தேவைப்பட்டது பணம் அல்ல. ‘என்னால் முடியும்’ என்ற தன்னம்பிக்கை. அந்த நம்பிக்கையையும் பாஸிட்டிவ் எண்ணத்தையும் அந்த செல்லாத காசோலை கொடுத்தது.
இதுதான் எண்ணங்களின் சக்தி. அளவற்ற பணம் தன்னிடம் இருப்பதாக அவர் நினைத்தார். அதனால் ஜெயித்தார். நாமும் அப்படி நினைத்தால் நிச்சயம் ஜெயிப்போம்! Think Positive ❤️👍🏼




