சிறுகதை – வரதட்சணை வாங்காமல்…
‘சே! ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தோம்? வெளியே சொல்லப் பெருமையாக இருக்கு. ஆனால் நடைமுறையில்?’ கார்த்தியின் மனம் புலம்பியது. தன்னை விடச் சாதாரணமானவனெல்லாம் ஹீரோ ஹோண்டாவில் போகிறான். கேட்டால், ‘பெண் வீட்டில் கொடுத்தது. உன்னைப் போல நாங்களும் என்ன ஏமாளியா?’ என்று கூறிச் சிரிக்கிறார்கள்.
‘அட! இந்த ரகுபதி! சாதாரணமான கிளர்க். அவனுக்கு முப்பது சவரன், பைக், இருபதாயிரம் ரொக்கம். இதே கம்பெனியில் இன்ஜினியர் நான். வெளியே சொன்னா வெட்கம்!’ தெரியாத்தனமாகக் கொஞ்சம் இலக்கிய சம்பந்தம். கொஞ்சம் முற்போக்குச் சிந்தனை. இரண்டு தங்கைகளைக் கட்டிக் கொடுத்தபொழுது பட்ட வேதனை. அதனால் வரதட்சணை வேண்டாம், எளிமையான திருமணம் போதும் என்று கூறி விட்டான். அதன் விளைவு?
“என்னடா சாப்பாடு? ஒண்ணும் சரியில்லையே… ”
“மாலை கொஞ்சம் பெரிய சைசா வாங்கி இருக்கக் கூடாது?”
”என்னது? வீடியோகூட இல்லையா?”
“சே! சே! உன் கஞ்சத் தனத்தைக் கல்யாணத்துலையா காட்டுறது?” “ஒண்ணும் இல்லாதவன் எல்லாம் ஓகோன்னு பண்றான்…”
திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் விமர்சனம் காதில் விழுந்து சங்கடப்படுத்தியது. தவறான ஒரு முடிவை எடுத்து விட்டோமோ?
முதல் முறையாக மறுபரிசீலனை செய்தான் கார்த்தி, இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு வந்திருந்த மானேஜர் தணிகாசலம் மீண்டும் அவனைச் சிந்திக்க வைத்தார்.
‘சாரிப்பா! கல்யாண சமயத்தில கம்பெனி விஷயமா டூர்ல இருந்தேன். அதனால வரமுடியலை!”
”பரவாயில்ல சார்! அதான் வீடு தேடி வந்திருக்கீங்களே!”
“கல்யாணம் ரொம்ப சிம்பிளா இருந்ததாமே!
“ஆமா சார்! பெண் வீட்டில் கொஞ்சம் சிரமம்.”
“ம்! அதையும் கேள்விப்பட்டேன். பொண்ணு சொந்தமா?”
“அதெல்லாம் இல்லை சார்.”
“பின்ன ஏன் இப்படி?”
“புரியலையே சார்…”
“எத்தனை பவுன் போட்டாங்க. ”
“கமலா எத்தனை பவுன்?” கார்த்தி திரும்பிக் கதவோரம் சாய்ந்தபடி இருந்த தன் புது மனைவியைப் பார்த்தான்.
“எட்டு.”
மானேஜர் தணிகாசலம் அவனைச் சற்று வியப்புடன் பார்த்தார். “பரவாயில்லையே!”
கார்த்தியின் மனத்திற்குள் எரிச்சல் மூண்டது. வரதட்சணை வாங்காதது வியப்பிற்கு உரிய ஒன்றாகிவிட்டதை எண்ணி வருத்தமும் எழுந்தது. கூடவே தவறு செய்து விட்டோமோ? என்ற உறுத்தல் தலை தூக்கியது.
டவுன் பஸ்ஸில் நெருக்கியடித்து ஏறிப் பயணம் செய்தபோதெல்லாம் எரிச்சல் வந்தது. தன்னைக் கடந்து செல்லும் எல்லா டூவீலரும் மாமனார் வீட்டுச் சீதனமாகத் தோன்றின. அன்று வழக்கத்திற்கு விரோதமாக அரைமணி நேரம் தாமதமாக கம்பெனிக்கு வந்தான் கார்த்தி.
வந்தவுடன் மானேஜரிடமிருந்து அழைப்பு வந்தது. ‘ம்! ஒரு டூவிலர் இருந்திருந்தால் நேரத்திற்கு வந்திருக்கலாம். இன்று விழித்த முகமே சரியில்லை. வழக்கம்போல வரதட்சணை தராத மனைவியின் முகம்தான். யாரைச் சொல்லி என்ன பயன்? தவறான முடிவை எடுத்தவன் நான்தானே?’ என்று நினைத்தபடி மானேஜர் அறைக்குள் நுழைந்தான்.
“வாங்க மிஸ்டர் கார்த்தி. உட்காருங்க” என்று வழக்கத்திற்கு மாறாக வரவேற்றார் மானேஜர். அவர் எதிரே அமர்ந்தான். “உங்களை அஸிஸ்டெண்ட் மானேஜரா பிரமோட் பண்ணியிருக்காங்க.” கார்த்திக்கால் நம்ப முடியலில்லை. அஸிஸ்டெண்ட் மானேஜர் என்றால் கம்பெனி வீடு, கார், அதிக சம்பளம். ”சார் எப்படி? எனக்கு மேலே மூணு சீனியர்ஸ் இருக்காங்க…”
டீ யுடன் சேர்த்து சாப்பிட சுவையான தேங்காய் பிஸ்கட் எப்படி செய்யறது? இதோ இப்படித்தான்!
“இருக்கட்டுமே. உன் சின்ஸியாரிட்டி எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். ஆனாலும் எல்லாரை விடவும் நீ ஒரு படி மேலே நின்னது உன் கல்யாண விஷயத்துலதான். இன்னைக்கு வரதட்சணை ஒரு ஃபாஷன். இவ்வளவு அதிகமா வாங்கினேன்னு சொல்லிக்கிறது பெருமை. முதுகெலும்பு இல்லாத பசங்க. நானும் என்னோட ஒரே பெண்ணுக்கு இன்னைக்கி வரை கொடுத்துக் கொடுத்து அலுத்தவன்தான். ஆனா கட்டின மனைவிக்கு எத்தனை பவுன் போட்டாங்கன்னு கூட தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்ட பாரு, அப்பவே நான் தீர்மானிச்சிட்டேன். உன் உழைப்பு மேலே உள்ள தன்னம்பிக்கைதான் உன்னை அப்படி நடந்துக்கத் தூண்டியிருக்கு. அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாத நல்ல எண்ணம் உனக்கு இருக்கு…”
தணிகாசலம் பேசிக்கொண்டே போனார். அவர் எடுத்த சரியான முடிவை எண்ணித் தனது இனிய மனைவியை மானசீகமாக மனத்திற்குள் வணங்கினான்.




