ஹைதராபாத்: ஜியாகுடா பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஆத்திரமடைந்து நடத்திய தாக்குதலில் 55 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு எதிரான குற்றச்சாட்டில் முகமது அப்துல் அஜீஸ் என்பவரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கும், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பாக தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே அதிகரித்து வரும் கோபம், சில நேரங்களில் சட்டத்தை மீறும் வன்முறைச் செயல்களாக மாறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜியாகுடா பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
View this post on Instagram




